Published : 20 Aug 2019 09:53 AM
Last Updated : 20 Aug 2019 09:53 AM

கெரிகேப்பள்ளி அரசுப் பள்ளியில் மழைநீர் கசியும் வகுப்பறையில் அச்சத்துடன் கல்வி கற்கும் மாணவர்கள்: சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை அருகே கெரிகேப்பள்ளி அரசு பள்ளியில் வகுப்பறை கட்டிடத்தில் மழைநீர் கசிவதால், மாணவர்கள் அச்சத்துடன் கல்வி கற்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பெற்றோர், கிராம மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் ஊத்தங்கரை அருகே உள்ள கெரிகேப்பள்ளி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த 1962-ம் ஆண்டு தொடங்கப்பட்ட, இப்பள்ளியில் கெரிகேப்பள்ளி, நாடார் தெரு, புதுக்காடு கிராமங்களில் இருந்து மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

பள்ளி தொடங்கிய காலத்தில் ஒலைக் கொட்டகையில் பள்ளி செயல் பட்டு வந்தநிலையில், கடந்த 25 ஆண்டுகளில் படிப்படியாக 2 வகுப்பறைகள் கொண்ட 3 கட்டிடங் களும், ஒரு வகுப்பறை கட்டிடமும் கட்டப்பட்டது. இந்த வகுப்பறை கட்டிடங்கள் போதிய பராமரிப்பு இல்லாததால், பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. தற்போது, மழைக்காலம் தொடங்கியுள்ளதால், கட்டிடங்களில் மழைநீர் கசிந்து, வகுப் பறைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் மாணவர்கள் கல்வி பாதிக்கப் பட்டு வருவதாக, கிராம மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக இப்பள்ளியின் முன்னாள் மாணவர் அனுமந்த்ராவ் (48) மற்றும் கிராம மக்கள் கூறும் போது, 10 ஆண்டுகளுக்கு முன்னர் வரை இப்பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வந்தனர். பள்ளியில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் எண்ணிக்கை சரிந்து வந்தது. கடந்த ஆண்டில் மாணவர்களின் எண்ணிக்கை 31 ஆக இருந்தது.

இதனிடையே அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும், கிராம மக்கள் சார்பாக பள்ளியில் கல்வி சீர் வழங்கும் விழா நடத்தியும் பள்ளி உள்கட்டமைப்பில் மாற்றங்கள் ஏற்படுத்தினர். இதன் காரணமாக தனியார் பள்ளிகளில் பயின்று வந்த மாணவர்கள், அதிகளவில் இப்பள்ளயில் ஆர்வத்துடன் சேர்ந்தனர். அதன்படி, மாணவர்களின் எண்ணிக்கை 31-ல் இருந்து 63 ஆக அதிகரித்தது. இந்நிலையில், மாணவர்களுக்கு கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளுக்கு போதுமான வகுப்பறைகள் இல்லை. ஏற்கெனவே கட்டப்பட்டுள்ள 3 வகுப்பறை கட்டிடங்களில், 2 பழுதாகி உள்ளன. தற்போது கட்டிடங்களில் ஏற்பட்டுள்ள விரிசல்களில், மழைநீர் கசிந்து, வகுப்பறையில் தண்ணீர் தேங்கி உள்ளதால், மாணவர்கள் சிரமத்துடன் வகுப்பறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பெற்றோர்களும் அச்சத்துட னேயே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகின்றனர். இப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறைகள், கணினி, டிஜிட்டல் நூலகம் அமைக்க கிராம மக்கள் திட்டமிட்டுள்ளனர். அதற்கான கட்டமைப்பு வசதிகளை மாவட்ட கல்வித்துறை ஏற்படுத்தி தர வேண்டும். மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க புதிய வகுப்பறை கட்டிடங்களும், ஏற்கெனவே பழுதாகி உள்ள கட்டிடங்களை சீரமைத்தும் தர வேண்டும் என்றனர். இதுதொடர்பாக மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் துரையிடம் கேட்டபோது, வகுப்பறை கட்டிடங்கள் 15 நாட்களுக்குள் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x