Published : 20 Aug 2019 09:49 AM
Last Updated : 20 Aug 2019 09:49 AM

பாலும் கசக்குமோ?- விலை உயர்வை குறைக்க வலியுறுத்தல்!

பால் கொள்முதல் விலையை உயர்த்தி விவசாயிகள் வயிற்றில் பாலை வார்த்துள்ளது தமிழக அரசு. அதேசமயம், பால் விற்பனை விலை அதைவிட அதிகமாக உயர்ந்து, ஏழை, நடுத்தர மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது என்கின்றனர் நுகர்வோர் அமைப்பினரும், சமூக ஆர்வலர்களும்.

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டுமென்று விவசாயிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையேற்று, மாட்டுப்பால் விலையை லிட்டர் ரூ.28-லிருந்து ரூ.32-ஆகவும், எருமைப்பால் விலையை ரூ.35-லிருந்து ரூ.41-ஆகவும் உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு விவசாயிகள் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், ஆவின் பால் விற்பனை விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்பட்டுள்ளது. கொள்முதல் விலையைக் காட்டிலும், விற்பனை விலையை உயர்த்தியுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பால் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக கோவை சிட்டிசன்ஸ் வாய்ஸ் நுகர்வோர் அமைப்பு தலைவர் சி.எம்.ஜெயராமனிடம் பேசினோம். “ஏற்கெனவே மின்சாரத் துறை நஷ்டத்தில் இருப்பதாகக் கூறி, அதிர்ச்சி வைத்தியத்துக்கான முன்னெச்சரிக்கை மணியை அடித்துக்கொண்டே இருக்கிறது தமிழக மின் வாரியம். பெரிய நிறுவனங்களிடம் வீட்டு வரி, குடிநீர்க் கட்டண நிலுவைகளை வசூலிக்காமல், சாதாரண மக்களுக்கான வீட்டு வரியை உயர்த்தி, அவர்களைத் திகைக்க வைத்துள்ளன உள்ளாட்சி நிர்வாகங்கள்.

தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருவதாகக் கூறும் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தனியார் பேருந்துகளுடன் போட்டி போட முடியாமல் தவிக்கின்றனர். அதேசமயம், தனியாரைக் காட்டிலும் அரசுப் பேருந்துகளில்தான் கட்டணம் அதிகம் என்பது நகை முரண். நிர்வாகச் சீர்கேட்டை சரி செய்யாமல், அடித்தட்டு மக்களையும், நடுத்தர மக்களையும் சிரமத்துக்கு உள்ளாக்குவதையே இவை வாடிக்கையாகக் கொண்டுள்ளன.

இப்போது, ஆவின் நிர்வாகம் பால் விலையை உயர்த்தி, ஏழை, நடுத்தர மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. ஒரு லிட்டர் கொள்முதல் விலையை ரூ.4 உயர்த்திவிட்டு, நுகர்வோரிடம் ரூ.6 விலையை உயர்த்துவது முறையா?
ஆவின் உயர்வைக் காரணம் காட்டி, லாபத்தில் கொழிக்கும் தனியார் பால் நிறுவனங்களும், தங்கள் இஷ்டத்துக்கு விலையை ஏற்றிவிடும். கடந்த முறை பால் விலை உயர்த்தும்போதே, இந்த விலை உயர்வு தனியாருக்கு மறைமுகமாக உதவும் என்று சிலர் குற்றம் சாட்டியது நினைவிருக்கலாம்.

விலை ஏற்றத்துக்கு முன், ஒரு சம்பிரதாயத்துக்குக்கூட பொதுமக்களிடம் கருத்து கேட்கவில்லை. நிர்வாகச் சீர்கேடுகளை சரி செய்து, மாநிலம் முழுவதும் பால் உற்பத்தி கூட்டுறவு சங்கங்களை முறையாக நிர்வகித்தாலே, விற்பனை விலையை அதிகரிக்காமல், கொள்முதல் விலையை உயர்த்தித் தர முடியும்.

அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு, அனைத்து சேவைகளுக்கும் கட்டணங்கள் அதிகரிப்பு, வரிவிதிப்பு அதிகரிப்பு, வங்கி, அஞ்சல் அலுவலக வட்டி விகித குறைப்பு, பங்குச் சந்தையில் முதலீடு சரிவு என பலமுனை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள பொதுமக்கள், தற்போது பால் விலையும் அதிகரிக்கும்போது, கூடுதல் செலவுக்கு என்னதான் செய்வார்கள்?

எனவே, நிர்வாகச் செலவுகளைக் கட்டுப்படுத்தி, மக்களையும், ஆவினையும் மீட்டெடுக்க வேண்டும்.

தேவையற்ற ஆடம்பர செலவுகளை குறைப்பது, மத்திய அரசின் உதவித்தொகையை திருப்பி அனுப்பாமல், உரிய காலத்தில், உரிய முறையில் பயன்படுத்துவது என நிர்வாகச் சீரமைப்பு நடவடிக்கைகள் அத்தனை துறைகளுக்கும் அவசியம். எனவே, பால் விலை ஏற்றத்தை தவிர்த்து, நுகர்வோரை தீராத துயரத்தில் இருந்து பாதுகாக்க தமிழக முதல்வரும், பால் வளத் துறை அமைச்சரும் முன்வர வேண்டும்” என்றார்.

“பெரும்பாலான வீடுகளில் பால் என்பது தவிர்க்க முடியாத உணவாகிவிட்டது. குறிப்பாக, குழந்தைகள், முதியோர் இருக்கும் வீட்டில் பாலின் தேவை அதிகம். பால் விலை உயர்வு என்பதே மக்களை நேரடியாகப் பாதிக்கும். தரமான பாலை, குறைந்த விலையில் வழங்க வேண்டியது அரசின் கடமை. எனவே, ஆவின் நிறுவனத்தை லாபமீட்டும் நிறுவனமாகக் கருதாமல், சேவையாற்றும் நிறுவனமாகக் கருதி, மக்கள் மீது சுமையை ஏற்றாமல் இருக்க வேண்டும். இந்த விலை உயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்” என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x