Published : 20 Aug 2019 08:58 AM
Last Updated : 20 Aug 2019 08:58 AM

பேரிடரில் பாடம் கற்றோமா?

ஆர்.டி.சிவசங்கர்

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தென் மாவட்டங்களையும், தற்போது மேற்கு மண்டலத்தையும் புரட்டிப் போட்டது பேரிடர். அமைதியான மாவட்டத்தை ஆக்ரோஷமாக தாக்கிய மழையால் நிலைகுலைந்து போனது நீலகிரி. ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஒரு பேரிடர் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், பேரிடர் தாக்குதல்களில் இருந்து நாம் பாடம் கற்றோமா என்பது சந்தேகமே என்கின்றனர் சூழல் ஆர்வலர்கள்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களில் மழைக் காலங்களில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களாக 233 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் 35 மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை தகவல் அளிக்கும் குழு, தேடுதல் மற்றும் மீட்புக் குழு, நிவாரண மைய மேலாண்மைக் குழுக்கள் அமைக்கப்பட்டு
உள்ளதுடன், அரசு சாரா அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இப்பணிகளில் ஈடுபடுத்தப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஆபத்து ஏற்படும் என மாவட்ட நிர்வாகம் கண்டறிந்துள்ள 233 இடங்களில் வசிக்கும் மக்களுக்கு, ஆபத்து குறித்து தெரியுமா என்பதே சந்தேகமாக உள்ளது என்றும் தெரிவிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

இது தொடர்பாக குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத் தலைவர் சு.மனோகரனிடம் பேசினோம். “இந்திய புவியியல் துறை, நாடு முழுவதும் பேரிடருக்கு உள்ளாகும் இடங்களை ஆய்வுசெய்து, பட்டியல் வெளியிட்டுள்ளது. 2009 ஆய்வின்படி மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள நீலகிரியில் 110 இடங்கள் பேரிடர் அபாயத்துக்கு உள்ளாகும் இடங்கள் என்று தெரியவந்துள்ளது. இந்த இடங்களில் மிக அதிக பாதிப்புகள் ஏற்படும். இதேபோல, அதிக பாதிப்புக்கு உள்ளாகக் கூடியவை, மிதமான பாதிப்புகளுக்கு உள்ளாகக் கூடியவை என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது, உதகை வட்டத்தில் 48, குன்னூரில் 64, கோத்தகிரியில் 64, குந்தாவில் 42, கூடலூரில் 5, பந்தலூரில் 10 இடங்கள் பேரிடர் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. இவ்வாறு பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க, 70 சதவீத சோலைக்காடுகள் அழிக்கப்பட்டு, விளை நிலங்களாகவும், தேயிலைத் தோட்டங்களாகவும் மாற்றப்பட்டதும், 10 சதவீத பகுதிகள் கட்டுமானங்களுக்காக அழிக்கப்பட்டதுமே காரணம்.

பேரிடர் பாதிப்பு ஏற்படக் கூடிய பகுதிகள் குறித்து மக்களுக்கு அறிவிக்கப்படவில்லை. மேலும், அந்தப் பகுதிகளில் பாதுகாப்பு தொடர்பாக எச்சரிக்கை அறிவிப்புகளும் ஏதுமில்லை. சில இடங்களில் எச்சரிக்கை செய்வதற்காக ஒலி பெருக்கிகள் மட்டும் அமைக்கப்பட்டன. பெரும்பாலான இடங்களில் அவையும் காட்சிப் பொருட்களாகவே உள்ளன.

அதேபோல, பேரிடரைக் கையாள மக்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சியும் உரிய முறையில் வழங்கவில்லை. இதனால், பேரிடர் ஏற்படும்போது மக்களுக்கு பதட்டம் ஏற்படுகிறதே தவிர, அந்த சூழலைக் கையாளக்கூடிய திறன் இல்லை. மேலும், பேரிடர் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளிலேயே ஏராளமான கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இவற்றுக்கு புவியியல் துறை, உள்ளாட்சி நிர்வாகம், வருவாய் துறைகள் எப்படி அனுமதி வழங்கின? மின் இணைப்பு கிடைத்தது எப்படி? இது தொடர்பாக விசாரித்து, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், நீலகிரி மலையின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்” என்றார்.

நீர் வழித்தடங்கள் மீட்கப்படுமா?

அண்மையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெருக்கெடுத்த வெள்ளமும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளும் நீர்வழித்தடங்களை மீட்க வேண்டிய அவசியத்தை மக்களுக்கு உணர்த்தியுள்ளது.

“நீலகிரியில் ஏற்பட்ட வெள்ள சேதங்களுக்கு நீர் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பே காரணம் என்கின்றனர் விஞ்ஞானிகள். 2009-ல் நீலகிரி மாவட்டத்தில் நேரிட்ட பேரிடரின்போது, நீர்வழித்தடங்கள் தொடர்பாக ஆங்கிலேயர் காலத்து வரைபடங்களை ஆய்வுசெய்து, 1,000-க்கும் மேற்பட்ட நீர்வழித்தடங்களை மீட்டதால்தான் தற்போதைய கன மழை மற்றும் வெள்ளத்தின்போது உதகை தப்பியது” என்கிறார் நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆ.ராசா.

மேலும் அவர் கூறும்போது, “அனைத்து நீர்வழித்தடங்களையும் கண்டறிந்து மீட்காததால்தான், கூடலூர் மற்றும் பந்தலூரில் கடும் சேதங்கள் ஏற்பட்டன. மாவட்ட நிர்வாகம், அப்பகுதிகளில் உள்ள நீர்வழித்தடங்களைக் கண்டறிந்து, அவற்றை மீட்டு, புனரமைக்க வேண்டும்” என்றும் தெரிவித்தார் ஆ.ராசா.

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறும்போது, “நீர்வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஆரம்பத்திலேயே அகற்றாமல், மின் இணைப்பு வழங்கி, வரி வசூலித்த பின்னர், அவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறுவது அபத்தமானது. ஆரம்பத்திலேயே ஆக்கிரமிப்புகளை தடுத்து நிறுத்தியிருந்தால், பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்காது.
நிலமற்ற ஏழை மக்கள்தான், மலைச் சரிவுகளிலும், பேரிடர் அபாயம் உள்ள இடங்களிலும் வசிக்கின்றனர். அவர்களுக்கு பாதுகாப்பான மாற்றிடத்தை அரசு ஏற்பாடு செய்துகொடுக்க வேண்டும். நீர்வழித்தடங்கள் மீட்கப்பட்டால், பேரிடரின்போது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x