

சென்னை
சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதி யில் நீல நிறத்தில் கடல் காட்சியளிப்பதால், அதை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்து வருகின்றனர்.
ஈஞ்சம்பாக்கம் பகுதியில் கடந்த 3 இரவுகளாக கடலில் திட்டு திட்டாக நீல நிற ஒளிகள் ஏற்பட்டு வருகின்றன. இது பார்ப்பதற்கு சீரியல் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருப்பதைப் போன்று கண்ணைக் கவரும் வகையில் உள்ளது. இதைப் பார்த்து முதலில் அச்சமடைந்த பொதுமக்கள், பின்னர் இதன் அழகை ரசிக்கத் தொடங்கினர்.
பின்னர் புகைப்படமாகவும், வீடியோக்களாகவும் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர். இந்நிகழ்வு பலருக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தாலும், இது எப்படி நிகழ்கிறது என்ற கேள்வியும் எழுகிறது.
மின்மினிப் பூச்சிக்கு இயற்கையாகவே ஒளியை உமி ழும் திறன் உள்ளது. அதேபோன்று கடலில் உள்ள ஒரு வகை பாசி, தன்னை உண்ண வருவோரிடம் இருந்து தற்காத்துக்கொள்ள, அவற்றுக்கு ஏற்படும் அதிர்வுகள் அடிப்படையில் நீல நிற ஒளியை உமிழ்கின்றன. இந்த நிகழ்வை உயிரி வெளியேற்றும் ஒளி (Bioluminescence) என்று அழைப்பர்.
இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்ப டும் கடற்கரைகளில், மாலத்தீவு, கம்போடியா உள்ளிட்ட நாடுகளின் கடற்கரைகள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. இதே நிகழ்வுதான் தற்போது ஈஞ்சம்பாக்கம் கடற்கரையில் ஏற்பட்டுள்ளது. இந்த நிகழ்வு பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், இதுபோன்ற ஒளியை உமிழும் பாசிகள் அதிகரிப்பது கடல் சூழலியலுக்கும், கடல் வாழ் உணவு சங்கிலிக்கும் ஏற்றது அல்ல என்று கூறப்படுகிறது.