Published : 20 Aug 2019 07:15 AM
Last Updated : 20 Aug 2019 07:15 AM

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் மத்திய அரசு நிறுவனங்கள் 100 ஏக்கருக்கு மேல் ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றத்தில் ஆய்வறிக்கை தாக்கல் 

சென்னை

சென்னையில் உள்ள பள்ளி்க் கரணை சதுப்பு நிலத்தில் மத்திய அரசு நிறுவனங்கள் 100 ஏக்கருக்கு மேல் ஆக்கிரமித்துள்ள தாக சென்னை உயர் நீதிமன் றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சதுப்பு நிலங்களைப் பாது காக்க ஒவ்வொரு மாநில உயர் நீதிமன்றமும் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து, இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்துக்கு உதவும் நபராக மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமனை நியமித்து இருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடந்தது. அப்போது பள்ளிக் கரணை மற்றும் கழுவேலி ஆகிய இடங்களில் உள்ள சதுப்பு நிலப் பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வு குறித்த ஆய்வறிக்கையை மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தாக்கல் செய்தார்.

அதில், கடந்த 1965-ம் ஆண்டு 5 ஆயிரத்து 500 ஹெக்டேராக இருந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம், 2013-ம் ஆண்டு கணக் கெடுப்பின்படி 600 ஹெக்டேராக சுருங்கி விட்டது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தையொட்டி யுள்ள மாநகராட்சியின் இரண்டு குப்பை கிடங்குகளால் நீர் ஆதாரம் மற்றும் தாவரங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கரணை சதுப்பு நிலத்தை 1,085 குடியிருப்புவாசிகள் ஆக்கிரமித் துள்ளனர். பறக்கும் ரயில் நிலைய தேவைக்காக மட்டுமே 100 ஏக்கர் அளவுக்கு சதுப்பு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலும் 20.25 ஏக்கர் நிலம் தேசிய கடல்சார் கல்வி நிறுவனத்தால் ஆக்கிரமி்க்கப்பட்டுள்ளது.

இதுபோல மத்திய காற்றாலை கள் நிறுவனம் மற்றும் பல தனியார் ஐடி நிறுவனங்களும் போட்டி, போட்டு பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதிகளை ஆக்கிரமித்துள் ளன. அங்கு பதிக்கப்பட்டுள்ள உயர் அழுத்த மின்கோபுரங்களால் அங்கு வாழ்ந்து கொண்டிருந்த அரியவகை பறவை இனங்கள் தற்போது இல்லை.

எனவே, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வர குப்பைக் கிடங்குகளை அகற்றுவதுடன் மத்திய, மாநில அரசுகள் மற்றும் தனியார் என யாருக்கும் பாரபட்சம் காட்டாமல் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் முழுமையாக அகற்ற உத்தரவிடவேண்டும்.

இதேபோல விழுப்புரம் மாவட் டம் திண்டிவனம் அருகேயுள்ள கழுவேலி சதுப்பு நிலப்பகுதி 600 சதுர கிலோமீட்டரில் இருந்து 75 சதுர கிலோ மீட்டராக சுருங்கிவிட்டது. அங்குள்ள சட்டவிரோத இறால் பண்ணைகளை அகற்ற வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையைப் படித்துப் பார்த்த நீதிபதிகள், இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் நாளைக்கு (ஆக.21) பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

இதற்கிடையே கோவை மாவட்டத்தில் உள்ள வேடப்பட்டி, புதுக்குளம் உள்ளிட்ட 47 நீர்நிலைகளில் தூர்வாரும் பணிகள் நடைபெறுவதாகக் கூறி அங்குள்ள மரங்கள் வெட்டப்படுவதாகவும், அந்த நீர்நிலைகளில் உள்ள மரங்களைப் பாதுகாக்க வேண்டும் என கோரி கோவையைச் சேர்ந்த மோகன்குமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க நீதிபதிகள் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x