நீருக்கு ஒரு பாடல்: உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு ஒரு புதுமையான முயற்சி

நீருக்கு ஒரு பாடல்: உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு ஒரு புதுமையான முயற்சி
Updated on
2 min read

சென்னை,

உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட்டது. இதில் நீருக்கு ஒரு பாடல் என்ற தலைப்பில் 50க்கும் அதிகமான புகைப்படங்கள் இடம்பெற்றன.

ஊட்டியில் புகைப்படக் கலையைக் கற்றுத் தரும் அமைப்பாக லைட் அண்ட் லைஃப் அகாடமி செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு 2001-ம் ஆண்டு இக்பால் முகமது மற்றும் விளம்பரத்துறை வல்லுநர் அனுராதா இக்பால் ஆகியோரால் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு நீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் நீருக்கு ஒரு பாடல் என்ற தலைப்பில் இன்ஸ்டாகிராம் வாயிலாக போட்டிக்கு அழைப்பு விடுத்தது. அறிவிப்பு வெளியான உடனேயே இந்தியா முழுவதிலும் இருந்து 2000-க்கும் மேற்பட்டோர் தலைப்புக்கு ஏற்ற புகைப்படங்களை அனுப்பி வைத்தனர். அதில் மிகச் சிறந்த 50 புகைப்படங்கள் கண்காட்சிக்குத் தேர்வு செய்யப்பட்டன. அவை கடந்த 16-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை சென்னை அண்ணா சாலையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ-வில் காட்சிக்கு வைக்கப்பட்டன.

இன்று கண்காட்சியின் நிறைவு விழாவில் லைட் அண்ட் லைஃப் அகாடமியின் நிறுவனரும், முன்னணி புகைப்படக் கலைஞருமான இக்பால் முகமது பேசியதாவது:

''ஒரு உயரிய நோக்கத்திற்காக லாப நோக்கின்றி அருமையான புகைப்படங்களை இந்தியா முழுவதும் இருந்து பார்ப்பது என்பதே நெஞ்சை நெகிழச் செய்தது. நீரை இப்படியெல்லாம் புகைப்படங்களாக பதிவு செய்ய முடியுமா என்று வியந்து போகும் அளவுக்கு அட்டகாசமான புகைப்படங்களை கண்டு பார்வையாளர்கள் ஆச்சர்யப்பட்டனர்.

பொதுவாக புகைப்படக் கண்காட்சி என்பது தனியான அரங்கில் நடைபெறும். ஆனால் எக்ஸ்பிரஸ் அவென்யூ போன்ற ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் ஒரு இடத்தில் இத்தகைய கண்காட்சியை நடத்தியபோது மக்கள் காட்டிய ஆர்வமும், ஒரு புகைப்படத்தோடு ஒன்றிப்போய் தியானம் போல அதனைப் பார்த்து மகிழ்ந்ததும் புகைப்படக் கலைக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கிறேன்.

செயல் தான் ஆகச் சிறந்த சொல் என்பார்கள். அதுபோல வெறும் புகைப்படக் கண்காட்சி என்பதாக மட்டுமல்லாமல் கடந்த 18-ந் தேதி சிறுவர்களுக்கு நீர் நாயகர்கள் என்ற தலைப்பில் போட்டி ஒன்று நடத்தப்பட்டது. தண்ணீரை எப்படி சிக்கனமாகப் பயன்படுத்துவது மற்றும் சேமிப்பது என்பதே இந்தப் போட்டியின் கருவாகும். 200-க்கும் மேற்பட்ட சிறார்கள் இதில் பங்கேற்று எக்ஸ்பிரஸ் அவென்யூ முழுவதும் சுற்றி பொதுமக்களின் நீர் சேமிப்பு முறைகளைப் பற்றி எடுத்துரைத்து வருங்காலத் தலைமுறை ஒரு அறிவார்ந்த தலைமுறை என்பதை நிரூபித்துக் காட்டினர். வருங்காலத்தில் நீரை சிக்கனமாகப் பயன்படுத்துவோம் என்று 200-.க்கும் மேற்பட்ட சிறார்கள் உறுதிமொழி ஏற்றது பார்த்தவர்களுக்கு ஒரு பாடமாக இருந்தது''.

இவ்வாறு இக்பால் முகமது பேசினார்.

சிறந்த புகைப்படங்கள் விற்பனைக்கும் வைக்கப்பட்டன. இந்தப் புகைப்படக் கண்காட்சியில் திரட்டப்பட்ட நிதி, இந்திய ஏரிகளை மீட்டெடுக்கும் பணிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள (E.F.I) என்ற அரசுசாரா தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

இந்தப் புகைப்படக் கண்காட்சியில் 2000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 5000க்கும் மேற்பட்டோர் பார்வையாளர்களாக வருகை தந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in