இந்திய இறையாண்மைக்கு எதிரான செயலை எதிர்க்கட்சிகள் செய்து வருகின்றன: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டு

இந்திய இறையாண்மைக்கு எதிரான செயலை எதிர்க்கட்சிகள் செய்து வருகின்றன: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டு
Updated on
1 min read

விருதுநகர்,

இந்திய இறையாண்மைக்கு எதிரான செயலை எதிர்க்கட்சிகள் செய்து வருகின்றன என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.

விருதுநகரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், பால்வளத்துறை அமைச்சர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முன்னதாக, காஷ்மீர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் டெல்லியில் நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு திமுக கலந்து கொள்ளும் என ஸ்டாலின் அறிவித்துள்ளது குறித்து அமைச்சரிடம் கேட்டக்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், "இந்திய இறையாண்மைக்கு எதிரான செயலை எதிர்க்கட்சிகள் செய்து வருகின்றன. இப்பொழுதுதான் இந்தியா ஒரு முழுமையான நாடாக உள்ளது.

இஸ்லாமியர்களின் ஓட்டு வங்கியை மனதில் வைத்துக்கொண்டு ஸ்டாலின் நடத்தும் நாடகம் வெத்து வேட்டு. பாகிஸ்தான் எந்த அளவுக்கு இந்தியாவையும் பாரதப் பிரதமரையும் எதிர்க்கின்றதோ, இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரான சதிகளைச் செய்கின்றதோ அதே அளவுக்கு எதிர்க்கட்சிகள் உள்ளிருந்து செய்கின்றன.

பாகிஸ்தான் வெளியிலிருந்து செய்யும் தீவிரவாதத்தை இவர்கள் கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் உள்ளிருந்து மக்களிடையே பிரிவினை செய்கிறார்கள். மோடியும் அமித் ஷாவும் எடுக்கும் முடிவை இந்தியாவில் உள்ள தேசத்தைப் போற்றும் ஆர்வலர்கள் பாராட்டுகிறார்கள்" என்றார்.

பால் விலை உயர்வு.. மானியக் கோரிக்கையில் விவாதம்:

அவர் மேலும் பேசும்போது, "பால் உற்பத்தி விலை உயர்த்தப்பட்டுள்ளது உற்பத்தியாளர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விலை உயர்வு வழக்கமான ஒன்றுதான். குற்றம் சாட்டுபவர்கள் குற்றம் சாட்டிக்கொண்டேதான் இருப்பார்கள். கொள்முதல் செய்யப்படும் பால் விற்பனை செய்யப்பட்டது போக எஞ்சியவை பால் பவுடராகவும் நெய்யாகவும் மாற்றப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 5 ஆண்டுகளாக விற்பனை விலை உயர்த்தப்படாததால் தான் இன்று இப்பிரச்சனை எழுந்துள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் சிறிது சிறிதாக விலை உயர்த்தப்பட்டு இருந்தால் அது தெரியாது. வரும் ஆண்டுகளில் மானியக் கோரிக்கையின் போது இது பற்றி பேசி பிரச்சினை ஏற்படாத அளவுக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

கால்நடைத் தீவன விலை உயர்வு காரணமாக விவசாயிகளுக்கு பால் கொள்முதல் விலையை உயர்த்தி கொடுக்க வேண்டியுள்ளது. இதற்காகவே பால் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது" என்றார் ராஜேந்திரபாலாஜி.

''ஊழல் குற்றச்சாட்டு என்பது யார் மீது வேண்டுமானாலும் யாரும் சொல்லலாம். ஆனால் அதை நிரூபிக்க வேண்டும். ஆவின் நிர்வாகத்தில் தவறு ஏற்பட வாய்ப்பு இல்லை. இடைத்தரகர்களுக்கு வேலை இல்லை. தனக்கு லாபம் இல்லை என்று எண்ணக் கூடியவர்கள் தான் எங்கள் மீது குற்றம் சொல்பவர்கள்'' என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in