Last Updated : 19 Aug, 2019 03:22 PM

 

Published : 19 Aug 2019 03:22 PM
Last Updated : 19 Aug 2019 03:22 PM

பிரதமர் அறிவிப்பை ஆதரித்து ப.சிதம்பரம் பேசியதில் எந்த நிர்பந்தமும் இல்லை: திருநாவுக்கரசர் விளக்கம்

புதுக்கோட்டை,

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மத்திய அரசை ஆதரித்துப் பேசியதில் எந்த விதமான நிர்பந்தமும் இல்லை என திருச்சி தொகுதி எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

சுதந்திரப் போராட்ட வீரரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான தீரர் சத்தியமூர்த்தியின் பிறந்த நாளையொட்டி புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், "தமிழக அரசு பால் விலையை உயர்த்தியது கடும் கண்டனத்துக்குரியது.

மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், பிரதமர் மோடியை ஆதரித்துப் பேசுவதற்கு எந்த நிர்பந்தமும் இல்லை. பயமும் இல்லை. விமர்சனம் செய்யும்போது தவறுகளை மட்டுமே சுட்டிக்காட்ட வேண்டியதில்லை. அரசு நல்லது செய்தால் அதையும் ஆதரித்து கருத்து கூறுவதில் தவறில்லை.

எனவே, மோடி பேசிய பிளாஸ்டிக் ஒழிப்பு போன்றவற்றை சிதம்பரம் ஆதரித்துப் பேசியதால் இருவருக்கும் இடையே ஏதோ ஒரு நிர்பந்தம் இருக்கலாம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறியது அவருடைய சொந்தக் கருத்தாகும். இந்தக் கருத்தினால் கூட்டணிக்குள் எவ்வித சலசலப்பும் இல்லை.

காங்கிரஸ் கட்சியைப் பற்றி வைகோ விமர்சனம் செய்தபோது கூட்டணிக் கட்சித் தலைவர் என்ற முறையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இரு தரப்பினரிடமும் தொலைபேசியில் பேசி சமரசம் செய்து வைத்தார்" என்றார்.

தவறிய தமிழக அரசு..

தொடர்ந்து பேசிய அவர், "மேட்டூர் அணை தற்போது திறக்கப்பட்டு அதிக அளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆனால், தண்ணீர் திறப்பதற்கு முன்பே கடைமடை வரை வாய்க்கால்களைச் சீர்செய்திருக்க வேண்டும். அதைச் செய்ய தமிழக அரசு தவறிவிட்டது.

திருச்சி தொகுதி மக்களவை உறுப்பினராகி 2 மாதங்கள்தான் ஆகின்றன. அதிலும் பல முறை திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளேன். அதற்குள், என்னைக் காணவில்லை என்று விளம்பரத்துக்காக அடையாளம் தெரியாத சிலர் என் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். அதை ஒரு பொருட்டாக நான் கருதவில்லை" என்று பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x