Published : 19 Aug 2019 02:53 PM
Last Updated : 19 Aug 2019 02:53 PM

காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் 22-ம் தேதி ஆர்ப்பாட்டம்- ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை,

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக வரும் 22-ம் தேதி டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மறுசீராய்வு மசோதாவை அண்மையில் மத்திய அரசு நிறைவேற்றியது. அதில் காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து விலக்கிக் கொள்ளப்பட்டது. அதேபோல காஷ்மீர், லடாக் ஆகிய இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசியல் தலைவர்கள் ஒமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி ஆகியோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த விவகாரத்தை எதிர்த்து வரும் 22-ம் தேதி டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

''அமைதி திரும்புகிறது என்று அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகள் மூலம் செய்தி பரப்பிக் கொண்டே, கடந்த 5.8.2019 முதல் காஷ்மீர் அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரையும் கைது செய்து, தொலைதொடர்புகளைத் துண்டித்து, காஷ்மீரில் சட்டவிரோத நெருக்கடி நிலைமையை செயல்படுத்திக் கொண்டிருப்பதற்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் ஒமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி ஆகியோர் ஜனநாயகத்தின் குரலாக நின்று காஷ்மீர் மக்களுக்கு அரும்பணியாற்றியவர்கள். இவர்கள் அனைவரையும் கைது செய்து இன்றோடு 14 நாட்களுக்கும் மேலாக வீட்டுக் காவலில் வைத்து அவர்களின் பேச்சுரிமை, அடிப்படை உரிமை ஆகிய அனைத்தையும் பாஜக அரசு பறித்துள்ளது.

ஆகவே கைது செய்யப்பட்டுள்ள காஷ்மீர் தலைவர்கள் அனைவரையும் விடுதலை செய்யக் கோரி வருகிற 22.8.2019 அன்று டெல்லி, ஜந்தர் மந்தரில் அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்''.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x