Published : 19 Aug 2019 01:58 PM
Last Updated : 19 Aug 2019 01:58 PM

ஆட்டோமொபைல் துறையைக் காப்பாற்ற தொழில்நுட்ப மாற்றத்திற்கான சிறப்பு நிதியை ஒதுக்க வேண்டும்: அமைச்சர் பாண்டியராஜன் 

மதுரை,

ஆட்டோமொபைல் துறையைக் காப்பாற்ற, தொழில்நுட்ப மாற்றத்திற்கான நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும். இல்லாவிட்டால் மிகப்பெரிய வேலையிழப்பைச் சந்திக்க நேரும் என அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார்.

மதுரையில் இன்று (திங்கள்கிழமை) உலகத் தமிழ் சங்கத்தில் நடைபெறும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், "மிக முக்கியமான கட்டத்தில் ஆட்டோமொபைல் உற்பத்தி தொழில் இருக்கிறது. இந்தியாவில் 42 சதவீத வாகன உற்பத்தி தமிழகத்தில் இருக்கிறது. இப்போதைய பின்னடைவின் தாக்கம் தமிழகத்தில் மிக அதிகமாக இருக்கும்.

வாகன உற்பத்தி தொழில் சார்ந்த முனைவோர்கள் ஆட்டோமொபைல் உற்பத்தி தொழில் வீழ்ச்சியை சரிகட்ட ஒரு சிறப்பு நிதியை ஒதுக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். அடுத்த 5 ஆண்டுகளில் உற்பத்தியாகும் வாகனங்களின் எண்ணிக்கையில் பாதி அளவுக்காவது மின்சாரக் கார்களாக இருக்க வேண்டும் என்பது மத்திய அரசின் திட்டமாக இருக்கிறது.

தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புகூட ஒரு பெரிய ஆட்டோமொபைல் தொழிற்சாலை தொடங்கப்பட்டது. 50 ஆண்டுகள் நீடித்து இருக்கக்கூடிய அந்த ஆட்டோமொபைல் தொழிற்சாலையில் ஏழு ஆண்டுகளுக்குள் உற்பத்தி மாடலையே மாற்ற வேண்டும், மின்சாரக் கார்களாக மாற்ற வேண்டும் என்றால் அது எவ்வளவு பெரிய கடினம்.

3000 உதிரி பாகங்கள் ஒரு பெட்ரோல், டீசல் காருக்குத் தேவை என்றால் மின்சாரக் காருக்கு 500 பாகங்கள் போதும். ஆக தொழில்நுட்ப ரீதியாக ஆட்டோமொபைல் தொழிற்சாலை நிறைய மாற்றம் காண வேண்டும். அவர்களது பொருளாதார வீழ்ச்சியை சரிகட்ட தொழில்நுட்ப மாற்றத்திற்கான நிதியை ஒதுக்கி இந்தத் துறையைக் காப்பாற்ற வேண்டும்.

ஏற்கெனவே ஜவுளித் துறையில் ஏற்பட்ட தொழில்நுட்ப மாற்றத்தை இப்படிப்பட்ட நிதி மானியத்தின் மூலம் சரி கட்டினார்கள். இப்போது ஆட்டோமொபைல் துறையைக் காப்பாற்ற அது போன்ற தொழில்நுட்ப மாற்ற நிதியை ஒதுக்க மத்திய அரசு செவி சாய்க்க வேண்டும்.

இல்லை என்றால் 3 மாதத்திலேயோ ஒரு வருடத்திலேயோ மிகப்பெரிய வேலை இழப்பு ஏற்படும். ஏற்கெனவே ஒரு லட்சம் பேர் வேலை இழந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த எண்ணிக்கை கூடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்" என அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x