Published : 19 Aug 2019 12:26 PM
Last Updated : 19 Aug 2019 12:26 PM

மக்களிடம் நேரடியாகச் செல்லும் அதிகாரிகள்: சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் பழனிசாமி பேச்சு

முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்

சேலம்

முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

முதல்வர் பழனிசாமி கடந்த மாதம் 18-ம் தேதி சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், "மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு தமிழக அரசு அதிக முன்னுரிமை அளித்து வருகின்றது. மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு திங்கள் கிழமையும் வட்டாட்சியர் தலைமையில் அம்மா திட்ட முகாம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நடத்தப்படுகின்றன.

அரசு எடுத்துவரும் இத்தகைய முயற்சிகளுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், 'முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம்' என்ற ஒரு சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது. இந்தப் புதிய திட்டம் வரும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் செயல்படுத்தப்படும்" என்று அறிவிப்பு வெளியிட்டார்.

இந்நிலையில் இந்தத் திட்டத்தை இன்று சேலத்தில் தொடங்கி வைத்து முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

"இந்தத் திட்டத்தில் பெறப்பட்டுள்ள அனைத்து தகுதியான மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டத்தின் மூலம், நகரங்களிலும், கிராமங்களிலும் நேரடியாகச் சென்று மனுக்கள் பெற்று 4-5 மாதங்களுக்குள் தீர்வு காண உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, அனைத்து நகர்ப்புற வார்டுகளிலும், கிராமங்களிலும் உரிய விளம்பரத்திற்குப் பின்னர், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, ஒரு குறிப்பிட்ட நாளில், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகர்ப்புற வளர்ச்சித் துறை என பல துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் குழு ஆகஸ்ட் - செப்டம்பர் மாத இறுதிக்குள் சென்று மனுக்களைப் பெறுவார்கள். இம்மனுக்கள் அனைத்தும் கணினியில் பதியப்பட்டு சம்பந்தப்பட்ட துறைக்கு ஒருவார காலத்திற்குள் அனுப்பப்படும். அம்மனுக்கள் மீது கிட்டத்தட்ட 3-4 மாதங்களுக்குள் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்த பின்னர், செப்டம்பர் மாதத்தில் அமைச்சர் தலைமையில் வட்ட அளவிலான விழாக்களும் நடத்தப்படும். பல்வேறு நலத்திட்டப் பணிகள் விழாவில் வழங்கப்படுவதோடு, சாலை, தெருவிளக்குகள், மருத்துவம், சுகாதாரம், குடிநீர் வழங்கல் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கும் இவ்விழாவில் தீர்வு காணப்படும். இந்தத் திட்டத்தை செம்மையாகச் செயல்படுத்த, ஒரு வட்டத்திற்கு 27,000 ரூபாய் வீதம், 76 லட்சத்து 25,000 ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகாரிகளிடம் செல்வதற்குப் பதிலாக, அதிகாரிகள் மக்களிடம் செல்லும் விதமாக இத்திட்டத்தைத் தொடங்கியிருக்கிறோம்".

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

இதையடுத்து, பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மனுக்களை முதல்வர் பெற்றார். அதைத் தொடர்ந்து எடப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலும், பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் முதல்வர் பழனிசாமி கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனுக்களைப் பெறுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x