Published : 19 Aug 2019 11:01 AM
Last Updated : 19 Aug 2019 11:01 AM

திறப்பு விழாவுக்கு அதிகாரிகள் முன்வராததால் அரியூர் ரயில்வே மேம்பாலத்தை பொதுமக்களே திறந்தனர்

வேலூர்

கட்டுமானப்பணிகள் முடிந்தும் திறக்கப்படாமல் இருந்த அரியூர் ரயில்வே மேம்பாலத்தை பொது மக்களே நேற்று திறந்து பயன் பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

வேலூர் வழியாக காட்பாடி - விழுப்புரம் ரயில்வே தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழியாக ரயில்கள் சென்று வரும்போது ரயில்வே ‘கேட்’கள் மூடப்பட்டு ரயில் வந்து செல்லும் வரை வாகனங்கள் நிறுத்தப்படும். இதனால், மாநகர பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக, அரியூர் மற்றும் கஸ்பா பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

ிஐதய இந்த இடங்களில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் வேலூர் கஸ்பா மற்றும் தொரப்பாடி - அரியூர் சாலையில் மேம்பாலம் அமைக்கப்படும் என அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து, கடந்த 2013-ம் ஆண்டு கஸ்பா பகுதியிலும், 2014-ம் ஆண்டு அரியூர் பகுதியிலும் மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. இதற்காக, தமிழக அரசு ரூ.16 கோடி நிதியை ஒதுக்கீடு செய்தது. ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணிக்கான உத்தரவு கிடைத்ததும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

மேம்பாலத்துக்கான கட்டு மானப்பணிகள் தொடங்கப்பட்ட வுடன் அவ் வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வேலூரிலிந்து அரியூர், ஸ்ரீபுரம், ஊசூர், அணைக் கட்டு, ஒடுக்கத்தூர், வேப்பங் குப்பம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்பவர்கள் 10 கி.மீ., தொலைவுக்கு சுற்றிச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், மேம்பாலம் கட்டும் பணிகள் ஆமை வேகத்தில் நடை பெற்று வந்ததால் பொதுமக்கள் வேதனையடைந்தனர். திட்டப் பணிக்கான காலக்கெடு முடிந்தும் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடர்ந்து வந்தன.

இதைத்தொடர்ந்து, அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினர் நந்தகுமார் தலை மையில் சில மாதங்களுக்கு முன்பு அரியூர் ரயில்வே கேட் அருகே போராட்டம் நடத்தப்பட்டது. அதில், அரியூர் ரயில்வே மேம்பாலப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, பணிகள் முழுவீச்சில் நடைபெற்று சில மாதங்களுக்கு முன்பு மேம்பாலம் அமைக்கும் பணிகள் முடிவுக்கு வந்தன. இருப்பினும், ரயில்வே மேம்பாலத்தை திறக்க அதிகாரிகள் முன்வரவில்லை.

இதனால், பணிகள் முடிக்கப் பட்ட பிறகும் மேம்பாலம் பயன் பாட்டுக்கு கொண்டு வராததால் வழக்கம்போல் பொதுமக்கள் 10 கி.மீ., தொலைவுக்கு சுற்றிச் சென்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக வேலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அரியூர் - தொரப்பாடி சாலை சேறும், சகதியு மாக உள்ளதால் அவ் வழியாக செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் தவித்து வந்தனர்.

இந்நிலையில், கட்டிமுடிக்கப் பட்ட ரயில்வே மேம்பாலத்தின் இருபுறங்களிலும் இருந்த தடுப்பு களை அகற்றிவிட்டு பொதுமக்கள் மேம்பாலத்தை நேற்று காலை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர். இதைத்தொடர்ந்து, நேற்று காலை முதல் அரியூர் ரயில்வே மேம்பாலம் வழியாக அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆட்டோ, கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் சென்று வர தொடங்கின.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x