Published : 19 Aug 2019 10:45 AM
Last Updated : 19 Aug 2019 10:45 AM

ஆவின் பால் விலை உயர்வு ஏன்?- முதல்வர் பழனிசாமி விளக்கம்

சேலம்,

தமிழகத்தில் பால் கொள்முதல், விற்பனை விலை உயர்த்தப்பட்டுள்ளது குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.4 முதல் ரூ.6 வரை உயர்த்தப்பட்டுள்ளது. விற்பனை விலை ஒரு லிட்டருக்கு ரூ.6 உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், இதுகுறித்து இன்று சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் முதல்வர் பழனிசாமி.

அப்போது அவர் கூறியதாவது:

''தமிழகத்தில்தான் பால் உற்பத்தியாளர்களுக்கு அதிகபட்ச கொள்முதல் விலை வழங்கப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் வலியுறுத்தியபோதே இது குறித்து உறுதியளிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் ஒரு சில சங்கங்கள் மட்டுமே லாபகரமாக உள்ளன. பெரும்பாலான பால் உற்பத்தியாளர் சங்கங்கள் நஷ்டத்திலேயே இயங்குகின்றன. ஆனால், அரசு அனைத்தையும் சமாளித்து வருகிறது. இன்று சுமார் 4 லட்சத்து 60 ஆயிரம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைய வேண்டும் என்பதற்காகவே பால் கொள்முதல் விலையும் விற்பனை விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் 29.72 ரூபாய், கேரளாவில் 34.71 ரூபாய், ஆந்திராவில் 28.13 ரூபாய்க்கு பால்கொள்முதல் செய்யப்படுகிறது. அதேபோல, தெலங்கானாவில் 27.30 ரூபாய், குஜராத் 30.37 ரூபாய்க்கும் பால் கொள்முதல் விலை உள்ளது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது நமது மாநிலத்தில்தான் அதிக கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் விற்பனை விலையும் தவிர்க்க முடியாத வகையில் உயர்த்தப்பட்டுள்ளது''.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x