

பொறியியல் படிப்புக்கான கலந் தாய்வு நடைபெற்று வரும் நிலையில், சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவு கிறது. முக்கியமான கல்லூரிகளில் பெரும்பாலான இடங்கள் நிரம்பி விட்டன.
பொறியியல் படிப்பில் சேரு வதற்கான பொது கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகத்தில் ஜூலை 1-ம் தேதி தொடங்கியது. கலந்தாய்வு ஒவ்வொரு நாளும் 8 அமர்வுகளாக நடத்தப்படுகிறது. தினமும் 6 ஆயிரம் பேர் வரை கலந்துகொள்ள அழைப்புக்கடிதம் அனுப்பப்பட்டு இருக்கிறது.
கலந்தாய்வுக்காக வெளியூர் களில் இருந்து வரும் மாணவர்கள், துணைக்கு வரும் பெற்றோர் அல்லது உறவினர் என கலந்தாய்வு நடக்கும் பல்கலைக்கழக வளாகம் முழுவதும் கூட்டம் அலைமோது கிறது. பொதுவாக, கலந்தாய்வுக்கு வரும் மாணவர்களின் முதல் தேர்வு அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள், அதன்பிறகு அரசு பொறியியல் கல்லூரிகள், அதைத் தொடர்ந்து சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள முக்கிய கல்லூரிகள் என்ற வரிசையில் இருக்கும்.
ஒவ்வொரு ஆண்டுமே கலந்தாய்வு முதல் நாளில் முதல் ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் (கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், குரோம்பேட்டை எம்ஐடி) உள்ள அனைத்து இடங்களும் மின்னல் வேகத்தில் நிரம்பும். வழக்கம்போல் இந்த ஆண்டும் இதே நிலைதான்.
கலந்தாய்வு நேற்று 6-வது நாளாக நடந்தது. நேற்றைய நிலவரப்படி, ஏறத்தாழ 22 ஆயிரம் பேருக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது. நேற்றைய கலந்தாய்வுக்கு கட் ஆப் மதிப்பெண் 190 முதல் 188.25 வரையுள்ள மாணவ-மாணவிகள் அழைக்கப்பட்டிருந்தனர். இந்த கட் ஆப் மதிப்பெண் அளவிலான கலந்தாய்விலேயே சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள முக்கியமான கல்லூரி களில் பெரும்பாலான இடங்கள் நிரம்பிவிட்டன. ஒருசில படிப்பு களில், குறிப்பிட்ட சில இட ஒதுக்கீட்டுப் பிரிவுகளில் மட்டும் சில இடங்கள் காலியாக உள்ளன.
தினமும் காலை 7.30 மணிக்கு தொடங்கும் கலந்தாய்வு இரவு 8 மணி வரை நீடிப்பதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் வி.ரைமன்ட் உத்தரியராஜ் தெரிவித்தார். இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கும் கலந்தாய்வுக்கு கட் ஆப் மதிப்பெண் 188 முதல் 186.25 வரையுள்ள மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.