

சென்னை
ஆவின் பால் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.4 முதல் ரூ.6 வரை உயர்த்தப் பட்டுள்ளது. விற்பனை விலை ஒரு லிட்டருக்கு ரூ.6 உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இந் நிலையில், விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர் பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திமுக தலைவர் மு.க.ஸ்டா லின்: பால் விலை உயர்வு என்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வில் பெரும் சுமையாக இருக்கும். தரமான பால் விநியோகத்தை உறுதி செய்யவே இந்த விலை உயர்வு என்று அரசு கூறுகிறது. தரமான விநியோகம் என்பது அரசின் கடமையல்லவா? கடமை தவறிய அதிமுக அரசு, சுமையை மக்கள் தலையில் போடுவது சரியா?
விசிக தலைவர் தொல்.திருமாவளவன்: பால் கொள் முதல் விலையைவிட விற்பனை விலை அதிகமாக உள்ளது. ஆவின் நிறுவனத்தை முறைப்படுத் தினாலே பால் விலையை உயர்த்த வேண்டிய தேவை இருக்காது. ஏழை எளிய மக்களின், குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள மக்களின் தலையில் சுமையை ஏற்றாமல் தமிழக அரசு உடனடியாக பால் விலை ஏற்றத்தை திரும்ப பெற வேண்டும்.
அமமுக பொதுச்செயலாளர் தினகரன்: பால் விற்பனை விலையை உயர்த்தியிருப்பது கண்டனத்துக்குரியது. ஆவினில் தலைவிரித்தாடும் நிர்வாகச் சீர்கேடுகளைச் சரி செய்வதுடன், தமிழகம் முழுவதும் பால் உற்பத்தி கூட்டுறவு சங்கங்களை முறையாக செயல்படுத்தினாலே விற்பனை விலையை அதிகரிக்காமல், கொள்முதல் விலையை உயர்த்தித் தரமுடியும். எனவே, பால் விற்பனை விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும்
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன்:
பொது வழங்கல் முறை என்று பார்க்காமல் லாப வணிக நோக்கில் ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது. விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு தலைவர்களின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.