Published : 18 Aug 2019 12:43 PM
Last Updated : 18 Aug 2019 12:43 PM

ஆவின் நிறுவனத்தை முறைபடுத்தினாலே பால் விலையை உயர்த்த வேண்டிய தேவை இருக்காது: தொல்.திருமாவளவன்

பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்பட்டதையடுத்து பலதரப்புகளிலிருந்தும் இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. தொல்.திருமாளவனும் பால் விலை உயர்வை திரும்பபெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

பால் விலையை லிட்டருக்கு ஆறு ரூபாய் உயர்த்துவதாக ஆவின் பால் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு 19.8.2019 திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பால் விலை உயர்வை உடனடியாக தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

தமிழக அரசு திடீரென பால் விலையை உயர்த்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் தினமும் 2 கோடியே 6 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 25 லட்சம் லிட்டர் பால் வீட்டு பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது. மக்களின் அடிப்படையான உணவுப் பொருட்களில் ஒன்றான பால் உணவுப் பொருளாக மட்டுமல்லாமல் மருந்துப்பொருளாகவும் பயன்படுகிறது. ஏழை எளிய மக்களின், நடுத்தர வருவாயுள்ள மக்களின், குழந்தைகளின் சத்துணவாக பால் இருக்கிறது. இந்நிலையில், குறைந்த, நடுத்தர வருவாயுள்ள குடும்பங்களுக்கு இந்த விலை ஏற்றம் என்பது பெரும் நெருக்கடியாகும்.

பால் விலை உயர்வுக்கு மாடுத்தீவனங்கள் மற்றும் இடுபொருட்களின் விலை உயர்வு உட்பட பல காரணங்களை தமிழக அரசின் ஆவின் நிறுவனம் கூறினாலும் அது ஏற்புடையதல்ல. பால் கொள்முதல் விலையை விட விற்பனை விலை அதிகமாக உள்ளது. ஆவின் நிறுவனத்தை முறைபடுத்தினாலே பால் விலையை உயர்த்த வேண்டிய தேவை இருக்காது.

ஏழை எளிய மக்களின், குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள மக்களின் தலையில் சுமையை ஏற்றாமல் தமிழக அரசு உடனடியாக இந்த பால் விலை ஏற்றத்தை திரும்பப்பெற வேண்டுமென கேட்டுக்கொள்வதுடன், அரசு மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்கள், காப்பகங்கள் ஆகியவற்றுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் விலையை விட குறைந்த விலையில் பால் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x