

மதுரை
மதுரையில் பெரியார் மற்றும் காம்ப்ளக்ஸ் பஸ் நிலையங் களுக்கு மாற்றாக தற்காலிக பஸ்நிலை யங்கள் அமைக்க இதுவரை நடவடிக்கை எடுக்காததால், மாநகர பஸ்களை சாலையிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர். இதனால் பெரியார் பஸ் நிலையம் பகுதியில் தினமும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
மதுரை பெரியார் பஸ்நிலையம் இடிக்கப்பட்டு ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் ஹைடெக் பஸ்நிலையம் கட்டும் பணி நடக்கிறது. ஆனால், பெரியார் பஸ்நிலையத்துக்கு மாற்றாக தற்காலிக பஸ்நிலையத்தை மாநகராட்சி நிர்வாகம் அமைத்து தரவில்லை. அதனால், பெரியார் பஸ்நிலையம் வழியாக வந்த பஸ்களும், அங்கிருந்து நகரின் மற்ற பகுதிகளுக்கு சென்று வரும் பஸ்களும் தற்போது பெரியார் பஸ்நிலையம் அருகே சுற்றுலாத்துறை அலுவலகம் முன்பாக பழங்காநத்தம்-பெரியார் பஸ்நிலையம் சாலையில் நிறுத்தப்படுகின்றன.
அதுபோல், காம்ப்ளக்ஸ் பஸ்நிலையமும் இடிக்கப்பட்டதால் அங்கிருந்து புறப்படும் அனைத்து பஸ்களும், காம்ப்ளக்ஸ் பஸ்நிலையம் எதிரே உள்ள சாலையில் நிறுத்தப்படுகின்றன. பெரியார் பஸ்நிலையம், காம் ப்ளக்ஸ் பஸ்நிலையத்தில் இருந்து 24 மணி நேரமும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. தற்போது இந்த பஸ்நிலையங்களுக்கு மாற்றாக தற்காலிக பஸ்நிலையம் அமைக்கப்படாததால் இப்பகுதிகளில் சாலைகளே பஸ்நிலையங்களாக செயல்படு கின்றன. அதனால், காம்ப்ளக்ஸ் பஸ்நிலையம் எதிரேயும், பெரியார் பஸ்நிலையம் அருகேயும் சாலைகளை வாகன ஓட்டிகள் கடந்து செல்ல முடியவில்லை. இப்பகுதி மிகுந்த குறுகலான சாலைகளாக உள்ளன. சில சமயங்களில் பஸ்கள், இப்பகுதியில் குறுக்கும், நெடுக்குமாக நிறுத்தப்படுவதால் ஒட்டுமொத்த நகரப்போக்குவரத்தும் ஸ்தம்பிக்கின்றன. அதன்பிறகு போக்குவரத்து போலீஸார் பாடாதபாடு பட்டு, போக்குவரத்து நெரிசலைச் சீரமைக்கின்றனர். மாநகர் பஸ்களுக்கே இந்த நிலை என்றால் பயணிகள், சாலைகளில் மழையிலும், வெயிலிலும், புழுதியிலும் நின்று பஸ் ஏற வேண்டி உள்ளது. குடிநீர் வசதியில்லை.
மழை பெய்தால் இப்பகுதியில் தெப்பம் போல் தண்ணீர் தேங்கி விடுகிறது. அதனால், பஸ் ஏற முடியாமல் பயணிகள் தவிக்கின்றனர். பெரியார் பஸ்நிலையம் பகுதியில் போக்குவரத்து ஒழுங்கற்று இருப்பதால் இந்த பகுதியை கடந்து செல்ல வேண்டிய அவசரத்தில் பஸ்கள், கார்கள், இரு சக்கர வாகன ஓட்டிகள் தாறுமாறாக வருவதால் பயணிகள் பாதுகாப்பு இல்லாமல் அச்சத்திலேயே நிற்க வேண்டிய நிலை உள்ளது. சாலைகளை கடக்க முடியவில்லை. அதனால், இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு பலர் காயம் அடைகின்றனர். முதியவர்கள், பெண்கள் பெரியார் பஸ்நிலையம் பகுதியில் நின்று பஸ் ஏற முடியவில்லை. ‘ஸ்மார்ட் சிட்டி’ பெரியார் பஸ்நிலையம் கட்டி முடிக்க இன்னும் 2 முதல் 3 ஆண்டுகள் வரை ஆகும் வாய்ப்புள்ளது. அதுவரை மாநகர பஸ்நிலையமே இல்லாமல் பெரியார் பஸ்நிலையம், காம்ப்ளக்ஸ் பஸ்நிலையம் வந்து சென்ற பஸ்கள் சாலைகளிலே நிறுத்தப்படுவதால் பஸ் டிரை வர்களும், இந்த பகுதிகளை கடந்து செல்வதற்குள் மிகுந்த சிரமப்படுகின்றனர். பயணிகளும், மாநகர பகுதிகளில் செல்வதற்காக நெரிசல் மிகுந்த இந்த மாநகர் சாலைகள், பஸ்களில் பயணம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.