

கடந்த 2014-15 நிதி ஆண்டில் சென்னை ரயில்வே கோட்டத்தில் ரயில்வே சட்டவிதிகளை மீறிய 52,209 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து ரூ.1.27 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
ரயில் பயணிகளுக்கான சேவையை மேம்படுத்தவும், ரயில்வேயின் சாதனைகளை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்திய ரயில்வே சார்பில் நாடு முழுவதும் கடந்த மே 26-ம் தேதி முதல் ஜூன் 9-ம் தேதி வரையில் ரயில் நிலையங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதையடுத்து, ரயில்வே சட்ட விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
அந்த வகையில் கடந்த மே 25-ம் தேதி முதல் ஜூன் 9-ம் தேதி வரை நாடு முழுவதும் 7,000 ரயில் நிலையங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டன. வியாபாரிகள், பெண்களுக்கான ரயில் பெட்டிகளில் பயணம் செய்தவர்கள், ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டவர்கள் என சுமார் 10 ஆயிரம் பேரை மத்திய ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் அனுமதி பெறாமல் விற்பனை செய்தல், ரயில் நிலையங்களில் அசுத்தம் செய்தல் மற்றும் பயணிகளுக்கு இடையூறு செய்பவர்கள் மீது ரயில்வே பாதுகாப்பு படை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
இது தொடர்பாக சென்னை கோட்ட ரயில்வே பாதுகாப்பு படையின் மூத்த ஆணையர் அஸ்ரப்பிடம் கேட்ட போது, ‘‘ரயில்வே சட்ட விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதன்படி, கடந்த 2014-15 நிதி ஆண்டில் மட்டும் 52,209 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. இவர்களிடமிருந்து மொத்தம் ஒரு கோடியே 27 லட்சத்து 337 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அனுமதிபெறாமல் ரயில்களில் பொருட்களை விற்ற 10,098 வியாபாரிகள் மீதும், ரயில் பயணிகளுக்கு இடையூறு செய்யும் வகையில் நடந்து கொண்ட 18,553 பேர் மீதும், ரயில் நிலையங்களில் அசுத்தம் செய்த 4,74,400 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூலிக்கப்பட்டது. ரயில்வே சட்ட விதிகளை மீறுவோர் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
கடந்த 3 மாதங்களில் சென்னை ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ரயில்வே சட்ட விதிமுறைகளை மீறிய 10,910 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. அவர்களிடமிருந்து ரூ.28,59,390 அபராதமாக வசூலிக் கப்பட்டுள்ளது. ஆனால், ரயில்வே நிலையங்களை அசுத்தம் செய்தது தொடர்பாக ஒருவர் மீது கூட வழக்குபதிவு செய்யப்படவில்லை என புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.