Published : 18 Aug 2019 08:41 AM
Last Updated : 18 Aug 2019 08:41 AM

தமிழகத்தில் வறட்சி, நகரமயமாக்கலால் கடந்த 20 ஆண்டுகளில் 2.25 லட்சம் ஹெக்டேர் நெல் சாகுபடி பரப்பு சரிவு

சிவகங்கை

தமிழகத்தில் வறட்சி, நகர மயமாக்கல், லாபம் குறைவு போன்ற காரணங்களால் 20 ஆண்டுகளில் நெல் சாகுபடி பரப்பு கடும் சரிவடைந்துள்ளது. இதனால் உணவுப் பாதுகாப்புக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் முக்கிய உணவுப் பொருளாக அரிசி உள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் நெல் சாகுபடி அதிகளவில் மேற் கொள்ளப்படுகிறது. ஆனால் 20 ஆண்டுகளில் நெல் சாகுபடி பரப்பு வேகமாக குறைந்து வருகிறது. கடந்த 2000-01-ல் 20.80 லட்சம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. அதேபோல் நெல் உற்பத்தியும் 73.66 லட்சம் டன்னாக இருந்தது.

இது படிப்படியாக குறைந்து 2017-18-ல் நெல் சாகுபடி பரப்பு 18.55 லட்சம் ஹெக்டேராக சரிந்துள் ளது. நெல் உற்பத்தியும் 65.92 லட்சம் டன்னாகக் குறைந்துள்ளது. 2018-19-ல் நெல் சாகுபடி பரப்பு 18.50 லட்சம் ஹெக்டேராகவும், நெல் உற்பத்தி 69.50 லட்சம் டன்னாகவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால் வடகிழக்குப் பருவ மழை பொய்த்ததால் நிர்ணயித்த சாகுபடி பரப்பில் 80 சதவீதம்கூட எட்ட முடியவில்லை. சாகுபடி செய்த பல மாவட்டங்களில் பயிர் கள் கருகியதால் நெல் உற்பத்தி யும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

பருவ மழை பொய்த்தது, நகரமயமாக்கல், கட்டுப்படியான கொள்முதல் விலை கிடைக்காதது, காவிரி, முல்லை பெரியாறு அணைகளில் இருந்து குறித்த காலத்தில் தண்ணீர் திறக்காதது போன்ற காரணங்களால் நெல் சாகுபடி பரப்பு குறைந்து உற்பத்தி யிலும் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆந்திரா, தெலங் கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்க ளில் இருந்து தமிழகத்துக்கு அரிசி கொள்முதல் செய்யும்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மழை நீரைப் பாதுகாக்க நீர்நிலைகளை தூர்வாருவது, விளைநிலங்களை மனையிடங்களாக மாறுவதைத் தடுப்பது போன்ற நடவடிக்கைக ளில் அரசு முழுமையாக ஈடுபட வேண்டுமெனக் கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து நிலம் நீர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் கூறியதாவது:

நெல்லுக்குக் கட்டுப்படியான விலையை உறுதி செய்ய வேண் டும். கோதாவரி-காவிரி-வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். சிற்றாறு களை இணைக்க வேண்டும்.

காவிரி, முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க சட்டப்படியான முயற்சி களை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். நீர் நிலைகள் பாதுகாப் பில் உள்ளூர் விவசாயிகளை ஈடுபடுத்தும் வகையில் திட்டங் களை செயல்படுத்த வேண்டும். வெள்ளக் காலங்களில் நீர் வீணா வதைத் தடுக்கப் புதிய அணை களை கட்ட வேண்டும்.

நெல் சாகுபடி பரப்பு சரிந்து வருவதை அரசு ஆய்வு செய்து தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுதல் ஏற்படும் என்றார்.

வேளாண் அதிகாரி ஒருவர் கூறும்போது, "நீர்நிலைகளை மேம்படுத்த அரசும் குடிமராமத்து போன்ற திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. மேலும் தண்ணீர் பற்றாக்குறையால் நெல் விவசாயிகள் பலர் சிறு, குறு தானியப் பயிர்கள், பயிர் வகைகளைப் போன்ற மாற்றுப் பயிர்களுக்கு மாறி வருகின்றனர். இதனால் நெல் சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது. பருவ மழை பொய்த்துப் போகாமல் இருந்தால் சரிந்த பரப்பை மீட்டு விடலாம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x