Published : 18 Aug 2019 08:36 AM
Last Updated : 18 Aug 2019 08:36 AM

டெல்டா மாவட்ட சம்பா சாகுபடிக்கு 10 ஆயிரம் டன் நெல் விதை இருப்புவைப்பு:தேவையான அளவு உரங்களும் உள்ளன

டி.செல்வகுமார்

சென்னை

டெல்டா சாகுபடிக்கு ஏற்ற நெல் ரகங்களின் விதைகள் 9,850 மெட்ரிக் டன்னும் யூரியா, டிஏபி உள்ளிட்ட உரங்கள் 1 லட்சத்து 25 ஆயிரத்து 915 மெட்ரிக் டன்னும் இருப்பு வைக் கப்பட்டுள்ளன.

நடப்பு ஆண்டில் டெல்டா மாவட்டங்களில் குறுவை பருவத் தில் 3 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி நடைபெறுகிறது. சம்பா மற்றும் தாளடி பருவத்தில் 13 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரில் இயல்பாக சாகுபடி மேற்கொள்ளப்படும். சம்பா சாகுபடி என்பது மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரை நம்பியே மேற்கொள்ளப்படும்.

இந்நிலையில் டெல்டா மாவட் டங்களில் சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த 13-ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் கல்லணைக்கு தண்ணீர் வந்து சேர்ந்ததும் வாய்க்கால்கள் மூலம் திறந்துவிடப்படும்.

இந்நிலையில், சம்பா சாகுபடிக் குத் தேவையான விதைகளும் உரங்களும் போதுமான அளவுக்கு இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக வேளாண் அதிகாரி கூறினார். இதன்படி, நீண்டகால ரகமான சிஆர்1009, சப்1, ஏடிடி-50 நெல் விதைகள் டெல்டா மாவட்டங்களில் 3,404 மெட்ரிக் டன்னும் மேலும் பிற மத்திய கால ரகங்கள் 6,446 மெட்ரிக் டன்னும் ஆக மொத்தம் 9,850 மெட்ரிக் டன் விதைகளும் வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இந்த விதைகள் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் (அரிசி) திட்டம், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், விதை மற்றும் நடவு பொருட்களுக்கான துணை இயக்கம் ஆகிய திட்டங்களில் 50 சதவீத மானியத்தில் விநி யோகிக்கப்படுகிறது.

நீண்டகால ரகங்களை சாகுபடி செய்வதால் அக்டோபர், நவம்பரில் வழக்கமாக பெறப்படும் வடகிழக்கு பருவமழை தாக்கத்தில் இருந்து பயிர்களைப் பாதுகாக்க முடியும்.

இதுதவிர இடுபொருட்களான யூரியா, டிஏபி, காம்ப்ளக்ஸ், சூப்பர் பாஸ்பேட், பொட்டாஷ் ஆகிய உரங்கள் வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் மையங்களில் 1 லட்சத்து 25 ஆயிரத்து 915 மெட்ரிக் டன் இருப்பில் உள்ளன. மேலும், நெல் நுண்ணூட்ட கலவைகள் மற்றும் உயிர் உரங்கள் வேளாண் விரிவாக்க மையங்களில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

எனவே, நடவுக்கு முன்னர் பசுந்தாள் உரம் பயிரிட்டு மண் வளத்தை மேம்படுத்தவும் நேரடி நெல் விதைப்பு செய்ய வாய்ப்புள்ள இடங்களில் விதைப்பு பணி மேற்கொள்ளவும் திருந்திய நெல் சாகுபடி அல்லது இயந்திர நடவு தொழில்நுட்பங்களை மேற்கொள்ளவும் நாற்றாங்கால் அமைத்து சம்பா பருவத்தில் சாகுபடி மேற்கொள்ளவும் டெல்டா விவசாயிகளை வேளாண் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x