Published : 17 Aug 2019 05:48 PM
Last Updated : 17 Aug 2019 05:48 PM

உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக கூட்டணி தொடரும்: மதுரையில் நடந்த தமாகா மாநாட்டில் தீர்மானம்

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும், என்று மதுரையில் நடந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியத்துக்குட்பட்ட விரகனூரில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பேரூராட்சி, நகராட்சி தலைவர்கள் அரசியல் மாநாடு அக்கட்சி மாநிலத் தலைவர் ஜி.கே. வாசன் தலைமையில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது.

இந்த மாநாட்டில் மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட தமிழகம் முழுவதிலும் இருந்து அனைத்து தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர். மாவட்டத் தலைவர்கள், மூத்த தலைவர்கள், மாநில பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.

இம்மாநாட்டில், 1. மத்திய அரசு நதிகள் இணைப்பு திட்டத்தை நிறைவேற்றி விவசாயிகளின் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காண வேண்டும்.
2. மத்திய அரசு அறிவித்துள்ள கோதாவரி, காவிரி இணைப்பு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். 3. தமிழகம் முழுவதும் வருங்காலங்களில் அனைத்து இடங்களிலும் மழை நீர் சேகரிப்பு கட்டாயம் செயல்படுத்த வேண்டும். மேலும் புதிதாக கட்டப்படும் கட்டிடங்களுக்கும் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை கட்டாயமாக்கப்பட வேண்டும். 4. தமிழகத்தில் நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டிற்கு பிறகு ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இயக்கத்தை பலப்படுத்த திட்டமிட்டுள்ளோம். அதற்காகவே நிர்வாகிகளை அழைத்து கருத்துகளை கேட்கவே இந்த கூட்டத்தை நடத்தினோம். வரவிருக்கும் உள்ளாட்சித்தேர்தல், இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியுடன் இணைந்து 100 சதவீதம் வெற்றியைப் பெற தேவையான களப்பணி, வியூகங்களை அமைப்போம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x