Published : 17 Aug 2019 05:12 PM
Last Updated : 17 Aug 2019 05:12 PM

தேசிய கல்விக் கொள்கை; கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிராக அமைந்துள்ளதால் நிராகரிக்க வேண்டும்: பொதுப்பள்ளிக்கான மாநில மேடை மத்திய அரசுக்கு கடிதம்

தேசிய கல்விக்கொள்கை வழிகாட்டுதலாக அமைய வேண்டுமே ஒழிய, ஒரே நேரத்தில் ஒரே மாதிரியாக அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என பொதுப்பள்ளிக்கான மாநில மேடை மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

தேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையை மத்திய அரசு விவாதத்துக்கு சுற்றுக்கு விட்டது. தேசிய கல்விக் கொள்கை குறித்த கருத்துகளைத் தெரிவிக்க மத்திய அரசு ஆக.15- ம் தேதியை கடைசி நாளாக அறிவித்தது. கல்விக்கொள்கை குறித்து வரவேற்பும் எதிர்ப்பும் உள்ளது. தனிப்பட்ட நபர்கள், அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள் அமைப்புகள் என பலரும் இதுகுறித்த கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை இதுகுறித்து விவாதித்து மத்திய அரசுக்கு தனது கருத்தை கடிதமாக அனுப்பியுள்ளது.

தேசிய கல்விக் கொள்கை வரைவு குறித்து மத்திய அரசிற்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் சாராம்சம் குறித்து பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு வெளியிட்ட தகவல்:

“இந்திய அரசமைப்புச் சட்டம் முன்வைக்கும் கூட்டாட்சித் தத்துவத்திற்கும், சமத்துவக் கோட்பாட்டிற்கும் எதிராக தேசிய கல்விக் கொள்கை வரைவு 2019 அமைந்துள்ளதால் இவ்வரைவை இந்திய அரசு நிராகரிக்க வேண்டும் என்று பொதுப்பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது.

சமத்துவமான கற்றல் வாய்ப்பை தரக்கூடிய அருகமைப் பள்ளி அமைப்பில் பொதுப்பள்ளி முறைமையை உருவாக்கி அரசின் பொறுப்பிலும் செலவிலும் கல்வியை அனைவருக்கும் வழங்கிட வேண்டும் என்று பொதுப்பள்ளிக்கான மாநில மேடை இந்திய அரசைக் கோருகிறது.

‘பள்ளி வளாகம்’ என்ற அமைப்பு சமமான கற்றல் வாய்ப்பைத் தர இயலாது. 5+3+3+4 என்ற பள்ளிக் கல்வி அமைப்பு இந்திய பன்முகச் சூழலை உணர்ந்து வடிவமைக்கப்படவில்லை.

உயர் கல்வியிலும் மூன்று வகையாக நிறுவனங்களைப் பிரித்து, அனைத்து கலை/அறிவியல் கல்லூரிகளும் வகை மூன்றாக 2032-ம் ஆண்டிற்குள் மாறவேண்டும். தவறினால் அத்தகைய நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்பு (affiliating University) தந்த பல்கலைக்கழகத்துடன் இணைந்துவிட வேண்டும் என்ற கொள்கை மாநில அரசு நடத்தும் பல கல்லூரிகளை மூடும் சூழலை ஏற்படுத்தும். ஏழ்மையிலிருந்து விடுதலையடைய முயலும் மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பை மறுக்கும்.

3 ஆண்டு பட்டக் (Degree) கல்வியை நான்காண்டாக மாற்ற வேண்டிய அவசியம் ஏதும் இல்லை. கல்வியில் ஒரு நாட்டில் உள்ள முறையை அப்படியே பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. இன்று நடைமுறையில் உள்ள 10 +2 பள்ளிக் கல்வி முறையும், மூன்றாண்டு கலை/அறிவியல் பட்டப் படிப்பும் தொடர வேண்டும்.

மாநிலப் பட்டியலுக்கு கல்வி மீண்டும் கொண்டு வரப்பட்டு மொழி, கல்வி குறித்த கொள்கை முடிவுகளை மாநில அரசே எடுக்க வேண்டும்.

கல்வி தளத்தில் தேசிய அளவிலான கொள்கை ஒரு வழிகாட்டுதலாக மட்டுமே அமைய வேண்டும். ஒரே நேரத்தில் ஒரே மாதிரியாக அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது தேசிய ஒருமைப்பாட்டையும், கூட்டாட்சித் தத்துவத்தையும் வலுப்படுத்த உதவாது.

ஆகவே மத்திய அரசு தேசிய கல்விக்கொள்கையை நிராகரிக்க வேண்டும்” என பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x