

உடல் உறுப்பு தானம் குறித்து ஒவ்வொருவரும் தெரிந்து கொள்வது அவசியம் என உடல் உறுப்பு தான விழிப்புணர்வு குறித்த மாரத்தான் போட்டியினை தொடங்கிவைத்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உடல் உறுப்பு தானத்தை வலியுருத்தி 12,000 க்கம் அதிகமானோர் பங்கேற்ற பிரமாண்டமான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி இன்று (சனிக்கிழமை) காலை நடைபெற்றது.
உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை அனைவரிடமும் ஏற்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த மாரத்தான் போட்டி ஏசியன் ரெகார்ட் புக்கில் இடம் பிடித்தது.
விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர் பேசும்போது, "பிரதமர் மோடி தனது மனதின் குரல் நிகழ்ச்சியில் உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு தலைசிறந்த முன்னோடி மாநிலமாக விளங்குகிறது என பாராட்டியுள்ளார்.
அந்த வகையில் தமிழ்நாட்டில் இதுவரை 1,298 கொடையாளர்களிடமிருந்து 7,573 உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளது.
உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தொடர்ந்து நான்காவது முறையாக தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. இதற்காக மத்திய அரசின் விருதினை மக்கள் நல்வாழ்வுத்துறை பெற்று வருவது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும்.
ஏழை, எளிய மக்களுக்கு கட்டணமில்லாமல் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
அதற்கு எடுத்துக்காட்டாக இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கடந்தாண்டு கை மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட நாராயணசாமி என்பவர் தற்போது நலமாக உள்ளதை குறிப்பிடலாம்.
கடந்த ஆண்டு சென்னை ஜேப்பியார் கல்லூரியில் உடலுறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது.
குறிப்பாக உடல் உறுப்பு தானம் செய்த கொடையாளர்களின் குடும்பத்தினரை அரசு சார்பில் கவுரவித்தல் போன்ற நிகழச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
முக்கியத்துவம் வாய்ந்த உடல் உறுப்பு தானம் குறித்து ஒவ்வொருவரும் தெரிந்து கொள்வது அவசியமான ஒன்றாகும். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
முன்னதாக இப்போட்டிகளில் பங்குபெற்ற ஆண், பெண் பிரிவிற்கு தலா ரூ.10,000, ரூ.5,000, ரூ.3,000 வீதம் பரிசுகளும், போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.