Published : 17 Aug 2019 11:47 AM
Last Updated : 17 Aug 2019 11:47 AM

நெல்லை காவல் ஆணையர் இடமாற்றம் ஏன்? - காவல்துறையினர் மத்தியில் சலசலப்பு 

திருநெல்வேலி

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் பாஸ்கரன் பொறுப்பேற்று 6 மாதத்துக்குள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் என்.பாஸ்கரன் கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி பொறுப்பேற்றார். மாநகர பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பலர், காவல் ஆணையர் பாஸ்கரன் உத்தரவின்பேரில் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

சமீபத்தில், திருநெல்வேலி மாநகராட்சி முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருக சங்கரன், அவர்களது வீட்டு பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடக்கத்தில் துப்பு ஏதும் கிடைக்கவில்லை. இருப்பினும் காவல் ஆணையரின் மேற்பார்வையில் தனிப்படை போலீஸார் திறம்பட செயல்பட்டு, திமுக பெண் பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன் என்ற கார்த்திக் ராஜாவை கைது செய்தனர். போலீஸாரின் திறமையான செயல்பாடு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், கார்த்திக்ராஜா கைது செய்யப்பட்ட உடனே, இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

மாநகர காவல் ஆணையர் பாஸ்கரன் திருநெல்வேலி மாநகர பகுதியில் குற்றங்களை தடுக்க குடியிருப்போர் நலச் சங்கங்கள், பொதுமக்கள் பங்களிப்புடன் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவ நடவடிக்கை எடுத்தார்.

நேற்று முன்தினம் 93 கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை தொடங்கிவைத்த காவல் ஆணையர், “மாநகர் பகுதி முழுவதும் 10 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பதே இலக்கு” என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்நிலையில், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் என்.பாஸ்கரன் சென்னை செயலாக்க பிரிவு ஐஜியாக நியமிக்கப் பட்டுள்ளார். படிப்புக்காக விடுப்பில் சென்று, பணிக்கு திரும்பியுள்ள தீபக் எம்.தாமோர் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையராக நியமிக்கப் பட்டுள்ளார். பொறுப்பேற்ற 6 மாதத்துக்குள் திருநெல்வேலி காவல் ஆணையர் பாஸ்கரன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது காவல்துறையினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x