Published : 17 Aug 2019 11:35 AM
Last Updated : 17 Aug 2019 11:35 AM

நைஜீரியர்கள் வருகை குறைந்தது திருப்பூர் தொழில் துறைக்கு சாதகமா?

பெ.ஸ்ரீனிவாசன்

சர்வதேச அளவில் பின்னலாடை உற்பத்தியில் தனி கவனம் பெற்ற திருப்பூரில் ஆண்டுக்கு ரூ.48 ஆயிரம் கோடி வரை ஏற்றுமதி நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான உற்பத்தியாளர்கள், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஜவுளித் துறையை சார்ந்துள்ளனர். வர்த்தகம் தொடர்பாக தினமும் பல்வேறு நாடுகளில் இருந்தும் பலர் வந்து செல்கின்றனர்.

நைஜீரியா நாட்டிலிருந்து வருவோரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது. வர்த்தகம், படிப்பு, சுற்றுலா அனுமதி பெற்று வரும் நைஜீரியர்களில் பலர் முறைகேடாக திருப்பூரில் தங்கி, வர்த்தகம் செய்யத் தொடங்கினர். திருப்பூர் பின்னலாடைகளுக்கு ஆப்பிரிக்க நாடுகளில் கிடைத்த வரவேற்பு இதற்கு முக்கியக் காரணம்.

திருப்பூர் தொழில் துறையினரிடம் பின்ன லாடைகளை வாங்கியவர்கள், ஒருகட்டத்தில் ஏற்றுமதியாளர்களுக்கு வரும் ஆர்டர்களையும் அவர்கள் எடுத்து, திருப்பூர் சந்தையில் துணி களை வாங்கி, தைத்து, ஏற்றுமதி செய்தனர். இது தொழில் துறையினருக்கு சிக்கலை ஏற்ப டுத்தியது. மேலும், ஒருகட்டத்தில் உள்ளூர் வியாபாரிகள், வர்த்தகர்கள், பொதுமக்களுடன் மோதலிலும் ஈடுபடத் தொடங்கினர். போக்குவரத்து விதி மீறல், மக்கள் அச்சுறுத்தலில் ஈடுபட்ட நைஜீரியர்கள்
கைது செய்யப்பட்டனர். மேலும், போதைப் பொருள் பயன்பாடு, கடத்தல் புகார்களும் எழுந்தன. இதையடுத்து, உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியுள்ள நைஜீரியர்களை வெளியேற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து, உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியுள்ள நைஜீரியர்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட மத்திய உளவுத் துறையினர் மற்றும் உள்ளூர் போலீஸார், கெடுபிடிகளையும் அதிகரிக்கத் தொடங்கினர். பலர் கைது செய்யப்பட்டு, நாடு கடத்தப்பட்டனர். மேலும், சிலர் பணம் கொடுத்து இந்திய பெண்களைத் திருமணம் செய்து கொண்டனர். பலர் நகரிலிருந்து வெளியேறி, புறநகர் பகுதிகளில் குடியேறினர்.

இதற்கிடயில், திருப்பூருக்கு வரும் நைஜீரியர்களின் எண்ணிக்கை தற்போது 40 சதவீதம் வரை குறைந்துள்ளது. மத்திய உளவுத் துறை சார்பில், வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு அளிக்கப்பட்ட அறிக்கையே இதற்கு முக்கிய காரணமாக தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கச் செயலர் டி.ஆர்.விஜயகுமார் கூறும்போது, “நைஜீரியர்களால் திருப்பூர் தொழில்துறைக்கு பெரிய நன்மைகள் கிடையாது. முறையான வர்த்தக நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. இரண்டாம்தர பின்னலாடை வியாபாரிகளைத் தவிர, ஏற்றுமதியாளர்கள் யாருக்கும் அவர்களால் பலனில்லை. அவர்களது வருகை குறைந்ததில் எவ்விதப் பாதிப்புமில்லை. தற்போது திருப்பூர் தொழில் துறை நல்ல நிலையில் உள்ளது. உற்பத்தி நிறுவனங்களில் தவறுகள் தவிர்க்கப்பட்டு, உற்பத்தி செய்யப்படும் அனைத்து துணிகளும் ஏற்றுமதிக்கு செல்வதால், அவர்களுக்கு இங்கு வேலையில்லை” என்றார்.

டீமா (திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம்) தலைவர் எம்.பி.முத்துரத்தினம் கூறும்போது, “தரம் குறைந்த பின்னலாடைகளை அவர்கள் ஏற்றுமதி செய்யும்போது, ஒட்டுமொத்தமாக பெயர் கெடுகிறது. ஏற்கெனவே பல்வேறு நாடுகளின் போட்டிக்கு மத்தியில் ஆர்டர்களை எடுத்து வரும் நிலையில், நைஜீரியர்களின் செயல்பாடுகள் நெருக்கடியையே கொடுத்தன” என்றார்.

மத்திய உளவுத் துறை அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, “உயர்கல்வி, சுற்றுலா அடிப்படையில் திருப்பூர் வரும் நைஜீரியர்கள், சட்டவிரோதமாக இங்கு தங்கிவிடுவது குறித்தும், திருப்பூரில் நிலவும் பிரச்சினைகள் குறித்தும் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, கடந்த ஆண்டு இறுதியில் வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, திருப்பூருக்கு வருபவர்களின் பாஸ்போர்ட், விசா நடைமுறைகளில் கெடுபிடி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது 40 சதவீதம் வரை நைஜீரியர்களின் வருகை குறைந்துள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x