Published : 03 May 2014 09:55 am

Updated : 03 May 2014 09:55 am

 

Published : 03 May 2014 09:55 AM
Last Updated : 03 May 2014 09:55 AM

நசிந்துவரும் கயிறு திரிக்கும் தொழில்: பழைய நிலைக்கு திரும்புமா பாரம்பரியத் தொழில்

பல தலைமுறைகளாக செழித்திருந்த பெரம்பலூரின் கயிறு திரிக்கும் தொழில் இன்று முற்றிலுமாக நசிந்து கிடக்கிறது. தொழில் மற்றும் தொழிலாளர்கள் நலன் களையும் தாண்டி சுற்றுச்சூழலின் நலன் கருதியேனும் இந்த பாரம்பரிய தொழில் பழைய நிலைக்கு திரும்புமா?

பெரம்பலூர் நகரில் திருச்சி சாலையின் இருமருங்கிலும் ஒரு காலத்தில் கயிறு திரிக்கும் பணி கண்கொள்ளா காட்சியாக இருக்கும். பாரம்பரிய தொழிலை குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து பகுதி பகுதியாக பிரித்து செய்வர். தேங்காய் சிரட்டையிலிருந்து தருவிக்கப்பட்ட நாரை மெத்துவது, திரிக்கும் இயந்திரத்தில் அனுமார் வாலாக லாவகமாக நீட்டித் திரிப்பது, அவற்றை தேவைக்கேற்ப கயிறு களாய் முறுக்குவது என சாலையோர தொழில் மனைகளாக காட்சி தந்தவற்றை இன்று தேட வேண்டியிருக்கிறது.


அப்படி அருகிப்போன தொழிலை, பழங்கனவின் பெருமையாய் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கும் நபர்களில் ஒருவர் மாதேஷ். சாலையோரம் கூரைகூட இல்லாத கயிற்றுக் கடையை நடத்தி வருகிறார் இவர். பெருமைக்காக கயிறும், வயிற்றுக்காக வருடம் முழுமைக்குமான தொழிலாக கம்மங்கூழ் கடை ஒன்றையும் அருகிலேயே நடத்தும் மாதேஷ் கூறியது:

வேடிக்கை பார்க்க வருவார்கள்…

“எனக்கு 60 வயசாகுது. என்னோட தாத்தா, பாட்டி காலத்திலேயே சேலம் பக்கத்திலிருந்து இந்த பக்கம் கூட்டம் கூட்டமா குடியேறினவங்க நாங்க. அந்தக் காலத்தில கிணறு வெட்ட, வயலுக்கு ஏற்றம் இறைக்க, வீட்டுக் கிணற்றில் நீர் இறைக்க, கலப்பைக்கு, மாட்டுக்கு அப்படின்னு பலப்பல தேவைகளுக்காக விதவிதமா கயிறு திரிப்போம். கேரளாவிலேருந்து நார் வரவழைச்சு, அதை பக்குவமாக்கி, திரிச்சி, திடமா முறுக்கி விப்போம். சேர்ந்தாற்போல நீளமான இடம் தேவைப்பட்டதால, இப்படி ரோட்டோர மரத்தடியில நீட்டமான கயிறுகளை திரிப்போம். நாங்க கயிறு திரிக்கிற லாவகத்தை பார்க்கிறதுக்காக வெளியூர்லேர்ந்தெல்லாம் ஜனங்க வருவாங்க.

அதெல்லாம் அந்த காலம். அன்னைக்கு என்னிடம் 30 தொழிலாளிங்க வேலை பார்த் தாங்க. நைலான் கயிறு வந்தப்பறம் இந்த கயிறை சீண்ட ஆளில்லை. இன்னைக்கு ஒண்டி ஆளா நட்டத்துல தொழில் போனாலும் நிதம் கயிறோட முறுக்கை தொட்டுப் பார்க்கிற பழைய நினைப்பு முறுக்குல இருக்குறேன். என்னை மாதிரி பக்கத்துலேயே ஒருத் தரும், தெப்பக்குள கரையில ஒருத்தருமா மொத்தம் மூணே பழைய ஆளுங்க ஊர்ல மீந்திருக்கோம்.

இந்த மிஷின் எங்க குலசாமி…

சுண்ணாம்பு அடிக்க, கட்டிட வேலை களுக்கு சாரம் கட்ட கயிறு வேண்டியும், வெயில் காலத்துல கிணத்துல தூர் வாரன்னு கொஞ்சம் பேரும் வருவாங்க. அவங்களுக்காக இந்த பாழும் வெயில்ல காத்திருக்கேன். ஒரு காலத்துல சொந்த கயிறு திரிச்ச நிலை மாறி, இன்னைக்கு சேலத்துலேர்ந்து கயிறு வாங்கி விற்கிறோம். பழைய இரும்புக்கு போட மனசில்லாம எங்க குல சாமியாட்டம் இந்த கயிறு திரிக்கிற கை மெஷினையும் கண் பார்வையிலேயே வச்சிருக்கேன்.

ஜனங்க எங்களுக்காக இல்லாட்டாலும் பரவாயில்ல, நைலான் கயிறு மக்காம போயி சுற்றுச்சூழலுக்கு கேடாகும் நிலை மையை மாத்தவாச்சும் நார் கயிறுகளை பயன்படுத்தலாம். அரசோ வங்கியோ யாராச்சும் ஒரு அம்பதாயிரம் கடனுதவி கொடுத்தா சேலத்துலேர்ந்து வாங்கி விக்கிற நிலையை மாத்தி, நாங்களே பழையபடி திரிச்சி விக்கலாம்” என்று மாதேஷ் சொல்லி முடித்தபோது ஏக்கப் பெருமூச்சுகள் கயிறுபோல் திரிதிரியாக வெளிப்பட்டன அவரது பேச்சிலிருந்து.


கயிறு தொழில்பராம்பரியத் தொழில்கயிறு திரிக்கும் இயந்திரத்துடன் மாதேஷ்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x