Published : 17 Aug 2019 11:34 AM
Last Updated : 17 Aug 2019 11:34 AM

காற்றாலையும்... நூற்பாலையும்... மாசில்லா மின்சாரம் முழுமையாக பயன்படுத்தப்படுமா?

ஆர்.கிருஷ்ணகுமார்

காற்றாலைகளுக்கும், நூற்பாலைகளுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? உண்டு. நூற்பாலை உரிமையாளர்கள் நிறைய பேர் காற்றாலை வைத்துள்ளனர். காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் காற்றாலைகளுக்குப் பயன்படுத்தப்படுவதுடன், நூற்பாலைகளின் பொருளாதாரத்தில் காற்றாலைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த நிலையில், காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை முழுமையாகப் பயன்படுத்த தமிழ்நாடு மின் வாரியம் முன்வர வேண்டுமென்பதே காற்றாலை உற்பத்தியாளர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

மக்கள் தொகை அதிகரிப்பு, வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை உயர்வு, தொழில் துறை வளர்ச்சி, நவீன இயந்திர பயன்பாடு அதிகரிப்பு உள்ளிட்டவற்றால் மின்சாரத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அனல், நீர், அணு மின்சாரம் நமது தேவையை பூர்த்தி செய்தாலும், காற்றாலை, தண்ணீர் மற்றும் சூரிய ஒளி மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம் ஆகியவை சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாதவை. இயற்கை வளமான காற்று மற்றும் சூரிய ஒளி மூலம் கிடைக்கும் மின்சாரத்தை மாசற்ற மின்சாரம் என்கிறார்கள். நிலக்கரி மற்றும் கச்சா எண்ணெய் இருப்பு குறைந்துகொண்டே செல்வதால், காற்றாலை, சூரிய ஒளி மின்சாரத் தயாரிப்பை ஊக்குவிக்குமாறு மத்திய அரசும், மாநில அரசுகளுக்கு அறிவறுத்தியுள்ளது.

8 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி!

இந்தியாவில் ஏறத்தாழ 25ஆயிரம் காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன. அவற்றில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை தமிழகத்தில்தான் உள்ளன. இவற்றின் மூலம் 8 ஆயிரம் மெகாவாட்டுக்கு மேல் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். எனினும், காற்றின் வேகத்தைப் பொறுத்து ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம்.
தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திண்டுக்கல், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அதிக காற்றாலைகள் உள்ளன. வழக்கமாக மே மாதம முதல் செப்டம்பர் வரை காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். அப்போது அதிக அளவு காற்றாலை மின்சாரம் உற்பத்தியாகும்.

2017-ம் ஆண்டில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் அதிகபட்சமாக சுமார் 5,100 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தியானது. கடந்த ஆண்டிலும் காற்று மற்றும் மழை காரணமாக சராசரியாக 4 ஆயிரம் மெகாவாட்டுக்கு மேல் மின்சாரம் உற்பத்தியாகியுள்ளது.
தமிழகத்தின் மொத்த மின் தேவையில் சீசன் காலங்களில் 30 முதல் 35 சதவீதத்தை காற்றாலைகளை பூர்த்தி செய்கின்றன. ஏறத்தாழ 130-க்கும் மேற்பட்ட துணை மின் நிலையங்களுடன் 12 ஆயிரம் காற்றாலைகள் இணைக்கப்பட்டுள்ளன. அனைத்து மின் நிலையங்களிலும் உள்ள மீட்டர்களில் ‘சிம் கார்டு’ பொருத்தியுள்ளதால், காற்றாலைகள் மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தின் அளவை இப்போதெல்லாம் துல்லியமாக அளவிட முடிகிறது.

பயன்பாட்டில் தயக்கம் ஏன்?

சமீபகாலமாக பல பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், காற்றாலை மூலம் அதிக அளவு மின்சாரம் உற்பத்தி செய்யலாம். இந்த நிலையில், காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதிலும், பயன்படுத்துவதிலும் தமிழக மின் வாரியம் சுணக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, நூற்பாலை உரிமையாளர்கள் தரப்பில் இதுபோன்ற புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன. இது தொடர்பாக அவர்களிடம் பேசினோம்.

“பல்வேறு பிரச்சினைகளால் தற்போது நூற்பாலைத் தொழில் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் தாராபுரம், கோபி, கோவை, காங்கயம், திண்டுக்கல், வேடச்சந்தூர் பகுதிகளில் செயல்படும் நூற்பாலைகள் மூடும் நிலைக்குச் சென்றுவிட்டன. சுமார் 20 சதவீத நூற்பாலைகள் மூடப்பட்டுவிட்டன.

பாரம்பரியமாக செயல்பட்டு வரும் நூற்பாலைகளே பல கோடி நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. நூற்பாலைகளின் உற்பத்தி செலவில் சுமார் 14 சதவீதம் மின்சாரத்துக்கு செலவிடப்படுகிறது. ஒரு யூனிட்டுக்கு ரூ.7 மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஆரம்பகாலத்திலிருந்தே நிறைய நூற்பாலை உரிமையாளர்கள், காற்றாலைகளை அமைக்கத் தொடங்கினர். தமிழகத்தில் உள்ள காற்றாலைகளில் பாதியளவுக்கு நூற்பாலை உற்பத்தியாளர்கள்தான் வைத்துள்ளனர். இந்த காற்றாலைகளில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் நூற்பாலைகளுக்கு உதவியாக இருப்பதுடன், பொருளாதார அடிப்படையிலும் பயனுள்ளதாக உள்ளது.
நூற்பாலைகளுக்கான மின்சார செலவில் ஏறத்தாழ 3 சதவீதத்தை காற்றாலை மின்சாரம் மீதப்படுத்தியது. பல ஆண்டுகளுக்கு முன்பே காற்றாலைகள் அமைத்தவர்களுக்கு அதிகபட்சம் 10 சதவீதம் வரை மீதமானது.

நிதி நெருக்கடியில் தவிக்கும் நூற்பாலைகளுக்கு, காற்றாலை மின்சாரம் கைகொடுத்தது என்றே சொல்லலாம். கற்றாலை மின்சார உற்பத்தி, விநியோகம் உள்ளிட்டவை தமிழ்நாடு மின் வாரியம் மூலமாக பராமரிக்கப்படுகிறது. இந்த நிலையில், பல மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகமாக இருந்தாலும், காற்றாலை மின்சாரத்தை முழுமையாகப் பயன்படுத்துவதில்லை. ஏறத்தாழ 40 சதவீதம் மின்சாரத்தை வீணடிக்கிறார்கள். அதாவது 110 மில்லியன் யூனிட் உற்பத்தி செய்ய முடிந்தாலும், 66 மில்லியன் யூனிட் மின்சாரத்தை மட்டுமே உற்பத்தி செய்கிறார்கள்.

இயற்கை வளத்தை வீணடிக்கலாமா?

இதனால் ஒரு நாளைக்கு ஏறத்தாழ 4 கோடி யூனிட் மின்சாரம் வீணாகிறது. ஒரு யூனிட்டுக்கு சுமார் ரூ.6 என்று கணக்கிட்டாலும் ரூ.24 கோடி வீணாகிறது. 100 நாட்கள் சீசன் என்று கணக்கில் கொண்டாலும், ஏறத்தாழ ரூ.2,000 கோடி மதிப்பிலான மின்சாரம் உற்பத்தி செய்யப்படாமல், வீணடிக்கப்படுகிறது.

இயற்கை வளமான காற்றைப் பயன்படுத்தி, அதிக அளவில் மின்சாரம் உற்பத்தி செய்ய வாய்ப்பிருந்தும், காற்றாலை மின்சாரத்தை ஊக்கப்படுத்தாமல் இருப்பது நியாயமற்றது. இதனால் நூற்பாலைகளுக்கான நிதிச் சுமையும் அதிகரித்து, ஏற்கெனவே சிக்கலில் இருக்கும் நூற்பாலைகளின் நெருக்கடியை அதிகரிக்கவே செய்யும். நூற்பாலைகள் மூடும்போது வேலைவாய்ப்புகளும் பாதிக்கப்பட்டு, ஏராளமானோரின் வாழ்வாதாரம் சிக்கலாகும். எனவே, காற்றாலைகள் மூலம் 100 சதவீத மின்சாரம் உற்பத்தி செய்து, முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். தேவைக்கு அதிகமாக மின்சாரத்தை உற்பத்தி செய்யும்போது, பற்றாக்குறை நிலவும் வெளி மாநிலங்களுக்கு மின்சாரத்தை விற்கலாம்.

அதேபோல, காற்றாலை மின்சாரத்தை முழுமையாகப் பயன்படுத்தும்போது, அனல் மின்சாரத்தின் பயன்பாட்டைக் குறைக்க முடியும். இது நிலக்கரி பற்றாக்குறை பிரச்சினைக்குத் தீர்வு கொடுப்பதுடன், சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாக இருக்கும்.

குறைந்த விலையில், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத மின்சாரத்தை வழங்கும் காற்றாலைகளின் மேம்பாட்டுக்கு அரசு உதவ வேண்டும்.காற்றாலைகள் வழங்கும் மின்சாரத்துக்கு உரிய தொகையை, மின்சாரத் துறை உடனுக்குடன் வழங்க வேண்டும். பல மாதங்களுக்கு மேல் நிலுவை வைத்துள்ளதால், காற்றாலை உற்பத்தியாளர்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

நூற்பாலைகளின் ஜவுளி சங்கிலின் தொடரின் முக்கிய கண்ணியாக இருப்பதாலும், ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பை வழங்குவதாலும் பல மாநிலங்கள் நூற்பாலைகளுக்கு மின் சலுகைகளை வழங்குகின்றன. மகாராஷ்டிராவில் நூற்பாலைகளுக்கான மின்சாரக் கட்டணத்தில் யூனிட்டுக்கு ரூ.2 வரை குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல, பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களிலும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு சலுகைகள் அளிக்காவிட்டாலும்கூட, நெருக்கடியை ஏற்படுத்தும் செயல்களைத் தவிர்க்க வேண்டும்.

மேலும், புதிதாக காற்றாலைகள் நிறுவ முன்வருவோரை ஊக்குவிக்க வேண்டும்.தேவையற்ற நிபந்தனைகள், அனுமதி தருவதில் உள்ள காலதாமதம் உள்ளிட்ட நடைமுறைச் சிக்கல்களுக்குத் தீர்வுகாண்பது அவசியம். அதிக அளவில் காற்றாலைகள் நிறுவப்பட்டால், தமிழ்நாட்டின் மின் தேவையில் பெருமளவு பூர்த்தி செய்து, தொழிற் துறையினருக்கும் தடையின்றி மின்சாரம் வழங்கலாம்.

அனல் மின்சாரம் உள்ளிட்ட அனைத்து வகையான மின்சாரங்களுடன் ஒப்பிடுகையில், காற்றாலை மின்சாரத்துக்கான விலை குறைவுதான்.

எனவே, காற்றாலைகளை ஊக்குவிக்க அரசு முன்வர வேண்டும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x