Published : 17 Aug 2019 11:25 AM
Last Updated : 17 Aug 2019 11:25 AM

மழையால் பசுமைக்கு திரும்பிய காடுகள்!- வனக் குட்டைகளுக்கு செல்லும் யானைகள்

கோவை வனக் கோட்டத்துக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம், சிறுமுகை வனச் சரகப் பகுதிகள் பசுமையான காடுகளைக் கொண்டவை. நீராதாரங்கள் மற்றும் புல்வெளிகள் நிறைந்த இந்த அடர்ந்த காட்டுப் பகுதியில் புலி, சிறுத்தை, கரடி, செந்நாய், காட்டெருமை, பல்வகை மான் இனங்கள் என ஏராளமான வன உயிரினங்கள் இருந்தாலும், இவ்வனப் பகுதி யானைகளின் முக்கிய வலசைப் பாதை என்பதால் இவற்றின் நடமாட்டமே அதிகம்.

நடப்பாண்டில் பெய்ய வேண்டிய பருவ மழை பெருமளவு பொய்த்துப் போனதாலும் தற்போதைய தென்மேற்குப் பருவ மழை தள்ளிப் போனதாலும் இங்குள்ள வனப் பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டது. கடுமையான கோடை வெயிலின் தாக்கத்தால் காடுகளில் இருந்த இயற்கையான வனக் குட்டைகள், நீரோடைகள் என அனைத்தும் வற்றிப்போயின.

இதனால், தண்ணீர் தேடி தவித்த வன உயிரினங்கள் காட்டை விட்டு வெளியேறி, அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகும் அபாயம் அதிகரித்தது. இதையடுத்து, வனத் துறை சார்பில் காட்டின் எல்லையோரங்களில் தண்ணீர் தொட்டிகள் கட்டி, அதில் லாரிகள் மூலம் நீர் கொண்டு செல்லப்பட்டு நிரப்பும் நிலை உருவாகியது. செயற்கையான குட்டைகளும் உருவாக்கப்பட்டன.
மான் போன்ற சிறிய உயிரினங்களுக்கு இவை போதுமானதாக இருந்தாலும், யானை போன்ற பெரிய விலங்குகளுக்கு இந்த செயற்கை தண்ணீர் ஏற்பாடு போதுமானதாக இல்லை. குடிப்பதற்கும், தனது உடல் சூட்டை தணிப்பதற்கும் ஒரு நாளைக்கு ஒரு யானைக்கு குறைந்தபட்சம் 250 லிட்டர் தண்ணீராவது தேவை. இதனால் இந்தப் பேருயிர்கள் நீரைத் தேடி அலையும் அவல நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மேட்டுப்பாளையம், சிறுமுகை வனப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது. கன மழை, சாரல் மழை என தொடர்ச்சியாக பெய்த காரணத்தால் தற்போது வனத்தின் வறட்சி மறைந்து, காடுகளில் பசுமை திரும்பி வருகிறது. குறிப்பாக, இதுவரை வறண்டு கிடந்த வனக்குட்டைகள் நிரம்பி, நீரோடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், நீரைத் தேடி அலைந்த யானைகள் உள்ளிட்ட வன உயிரினங்கள் கூட்டம் கூட்டமாக நீர்நிரம்பிக் காணப்படும் குட்டைகளை நோக்கிப் படையெடுத்து வந்தபடி உள்ளன.

குறிப்பாக, யானைகள் தங்களது கூட்டங்களுடன் வந்து நீரை அருந்துவதுடன், குளித்து மகிழ்கின்றன. இது, வனத் துறை மற்றும் வன உயிரின ஆர்வலர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து சிறுமுகை வனச் சரக அலுவலர் மனோகரன் கூறும்போது, “மலைப் பகுதியில் பெய்யும் கன மழை காரணமாக சமநிலக் காடுகளில் உள்ள நீராதாரங்கள் மற்றும் நீர் தேக்கங்களைத் தேடி யானைக்கூட்டங்கள் வருவது மழைக் காலங்களில் இயல்பானதுதான். இப்படி வரும் யானைக் கூட்டங்களை யாரும் தொந்தரவு செய்யக் கூடாது. அவற்றை செல்போன் மூலம் படம் எடுப்பது, விரட்ட முயற்சிப்பது ஆகியவை ஆபத்தானது. யானைகள் கடந்து செல்லும்போது பாதுகாப்பான தூரத்தில் அமைதியாக இருந்தாலே, பிரச்சினைகள் உருவாகாது. பொதுமக்கள் இந்த விஷயத்தில் வனத் துறையுடன் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே, யானை-மனித மோதல்களை தவிர்க்க இயலும். மழை நீர் வீணாகக்கூடாது என்ற நோக்கில், வனப் பகுதியில் அமைத்த செயற்கை நீர்குட்டைகள் தற்போது நல்ல பலனைத் தந்துள்ளன” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x