

விழுப்புரம் மாவட்டம் வடக்குநந்தல் கிராமத்தைச் சேர்ந்த துரைசாமி என்பவரின் மகள் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். தனது வீட்டுக்கு அருகே, வெங்கடேசன் என்பவர் வீட்டுக்கு கடந்த 5-ம் தேதி சென்ற அந்த மாணவி, அங்கு ரூ.2 ஆயிரத்தை திருடியதாக கூறப்படுகிறது. அதை வெங்கடேசனின் 4 வயது மகள் பார்த்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
பெற்றோரிடம் 4 வயது சிறுமி உண்மையை கூறியுள்ளார். வெங்கடேசனின் மனைவி, அந்த மாணவி வீட்டுக்கு சென்று பணத்தை மீட்டதோடு, தரக்குறைவாகப் பேசியுள்ளார். இதனால் அவமானமடைந்த 10-ம் வகுப்பு மாணவி, நேற்று முன்தினம் மாலை, 4 வயது சிறுமியை விளையாட அழைத்துச் சென்று கிணற்றில் வீசிக் கொலை செய்ததாக தெரிகிறது.
இதுகுறித்து, கச்சிராப்பாளையம் போலீஸார் விசாரித்ததில், சிறுமியை, மாணவி விளையாட அழைத்துச் சென்றது தெரியவந்தது. போலீஸ் விசாரணையில், பழிவாங்கவே சிறுமியை கிணற்றில் வீசி கொலை செய்ததாக மாணவி ஒப்புக் கொண்டார். அவரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.