

நாகப்பட்டினம்
நாகை, வெளிப்பாளையத்தில் பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணியின்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு 2 தொழிலாளிகள் உயிரிழந்தனர். மேலும், ஒருவர் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
வெளிப்பாளையம் நம்பியார் நகர் அருகில் நகராட்சி பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணி தனியார் நிறுவனம் சார்பில் நேற்று நடைபெற்றது. இப்பணியில், நாகூர் அமிர்தா நகர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த மாதவன்(38), நாகை காட்டு நாயக்கன் தெருவைச் சேர்ந்த சக்திவேல்(27), வெளிப்பாளையம் வண்டிப்பேட்டையைச் சேர்ந்த ஸ்ரீதர்(40) ஆகியோர் ஈடுபட்டனர்.
பாதாள சாக்கடையின் மூடி யைத் திறந்து முதலில் சக்திவேல் இறங்கினார். இறங்கியவுடன் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவர் மயங்கி விழுந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மாத வன் உள்ளே இறங்கியபோது அவரும் மயங்கி விழுந்தார். முதலில் இறங்கிய 2 பேரும் மயங்கிய நிலையில், அவர்களைத் தொடர்ந்து இறங்கிய தரும் மயங்கி விழுந்தார்.
தகவலறிந்து, நகராட்சி அலு வலர்கள் அங்கு சென்று பார்த்த போது, சக்திவேலும், மாதவனும் மூச்சுத் திணறி இறந்தது தெரிய வந்தது.
மயங்கிய நிலையில் இருந்த ஸ்ரீதரை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். கவலைக்கிடமான நிலையில் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வெளிப்பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.