Published : 16 Aug 2019 06:56 PM
Last Updated : 16 Aug 2019 06:56 PM

இணையப் பயன்பாட்டின்போது எச்சரிக்கையாக இருப்பது குறித்த காணொலி: காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வெளியிட்டார் 

இணையப் பயன்பாட்டின்போது எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து ‘உஷார் பயன்பாட்டாளர்கள் மற்றும் சகலகலா பூச்சாண்டி’ என்ற தலைப்பிலான இசைக்காணொலி குறுந்தகட்டை சென்னை காவல் ஆணையர் இன்று வெளியிட்டார்.

இணைய பயன்பாட்டின்போது எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தும் விதமாக “உஷார் பயன்பாட்டாளர்கள் மற்றும் சகலகலா பூச்சாண்டி” என்ற தலைப்பில் இசை காணொளி இன்று (16.8.2019) வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சி சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. முருகப்பா குழுமமும் சென்னை மாநகர காவல் துறையும் இணைந்து தயாரித்துள்ள உசார் யூசர்ஸ், சகலகலா பூச்சாண்டி என்ற குறும்படத்தின் குறுந்தகட்டை சென்னை காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் வெளியிட முருகப்பா குழுமத் தலைவர் முருகப்பன் பெற்றுக்கொண்டார்.

ஏற்கெனவே கடந்த 09.03.2019 அன்று சைபர் க்ரைம் மற்றும் வங்கி மோசடி குறித்து தயாரிக்கப்பட்ட விழிப்புணர்வு குறும்படத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வெளியிட, குறுந்தகட்டை திரைப்பட இயக்குநரும் நடிகருமான மனோபாலா பெற்றுக்கொண்டார்.

இதன் தொடர்ச்சியாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “நல்ல இணைய பயன்பாட்டாளர்கள் நல்ல குடிமக்கள்” என்ற பெயரில், சென்னை பெருநகர காவல் துறையுடன் இணைந்து முருகப்பா குழுமம் தயாரித்துள்ள இசைக் காணொலியானது சமூக வலைதளத்தையும், இணையதளத்தையும் பொறுப்புடன் கையாள்வது எப்படி என்பது குறித்து சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இசைக் காணொலியின் பாடலை சுப்பு எழுதி தயாரித்திட, மேட்லி ப்ளூஸ் இசையமைக்க, நாட்டுப்புறப் பாடகர்களான அந்தோணிதாசன் மற்றும் சின்னபொண்ணு ஆகியோர் பாடியுள்ளனர். தற்போது பொதுமக்கள் சந்திக்கும் பெருமளவிலான இணையவழிக் குற்றங்களுக்கு காரணமாக விளங்கும் மூன்று முக்கியமான அம்சங்கள் இந்த காணொலியில் இடம் பெற்றுள்ளன.

* தனிநபர் விபரங்கள் மற்றும் முக்கியமான தகவல்கள் / புகைப்படங்களைப் பகிர்வதனால் இளம்பெண்கள் மற்றும் பெண்கள் சந்திக்கும் அபாயங்கள் குறித்து அறிய முடியும்.

* பொதுமக்கள் தங்களது நிதி சம்பந்தப்பட்ட தகவல்கள் / கடவுச் சொற்கள் / கடவு எண்கள் போன்றவற்றை ஒருபோதும் யாருடனும் பகிரக்கூடாது என்பதை அறிந்துகொள்ள இயலும்.

* இணையவழி மூலமாக வதந்திகளைப் பரப்புதல் / வெறுப்பினைத் தூண்டுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவதனால் ஏற்படும் சட்டரீதியான விளைவுகளை பொதுமக்கள் அறிந்துகொள்ள இயலும்.

விழிப்புணர்வு குறுந்தகட்டை வெளியிட்ட பின் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேசியதாவது:

“தற்போதைய சூழலில் நம்மிடையே இருப்பவர்கள் மீதான நம்பகத்தன்மை குறைந்து வருவது வருத்தமளிக்கிறது, நம்பிக்கை வைப்பது தவறா? என்ற நிலை தற்போது வந்துவிட்டது. நேரில் பார்த்து பழகாமல், யார் என்று தெரியாதவர்களுடன் சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களாகி அவர்களுடன் புகைப்படங்களை பகிர்ந்து கொள்கின்றனர்.

சமூக வலைதளங்களை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். நாம் புகைப்படத்தைப் பகிரும் போதும் மற்றவருடன் பேசும் போதும் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

அதேபோன்று ஏடிஎம் போன்ற பணப்பரிவர்த்தனைக்கான பாஸ்வேர்டுகளை யாருடனும் பகிர்ந்துகொள்ளக் கூடாது. சமூக வலைதளங்களை எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் கையாள வேண்டும்”.

இவ்வாறு காவல் ஆணையர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x