‘‘தாய்மொழி இந்தி; ஆனா தமிழ்தான் தெரியும்!’’- இப்படியும் ஓர் ஐந்து வயது மழலை

‘‘தாய்மொழி இந்தி; ஆனா தமிழ்தான் தெரியும்!’’- இப்படியும் ஓர் ஐந்து வயது மழலை
Updated on
2 min read

‘‘உம் பேரென்ன?’’
‘‘ஜெ..ஜெ...ஜெயஸ்ரீ..!’’
‘‘உன் அம்மா பேரு?’’
‘‘மல்லிகா!’’
‘‘எந்த ஊருல இருந்து வந்தீங்க?’’
‘‘டெல்லி...!’’
‘‘அங்கிருந்து எதுல வந்தீங்க?’’

‘ஊ... ஊ... குஜூ... குஜூ...’ வாயைக் குவித்து ரயில் போகிற மாதிரி கைகளைச் செய்து காட்டும் ஜெயஸ்ரீக்கு ஐந்து வயது. மழலை மாறாமல் தமிழ் பேசுகிறாள். ஆனால் இவளின் தாய்மொழி இந்தி. அது இவளுக்குத் தெரியாது. ஆனால் இவள் தாய் மல்லிகாவுக்கோ இந்தி மட்டும் தெரியும்; தமிழ் சுத்தமாகத் தெரியாது. என்றாலும் தாய் பேசும் இந்தியைக் கேட்டு தமிழில் பதில் சொல்கிறாள் ஜெயஸ்ரீ. மகள் பேசும் தமிழைக் கேட்டு இந்தியில் பதில் சொல்கிறார் தாய்.

கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி தங்கும் விடுதியில் இருப்பவர்கள் இந்தத் தாயும் மகளும். நான்கு வருடங்களுக்கு முன்பு தாய் மல்லிகா கோவை ரயில் நிலைய பிளாட்பாரத்தில் கையில் 11 மாதக் கைக்குழந்தையை வைத்தபடி அழுது கொண்டிருந்தார். அவரைப் பிடித்து ரயில்வே போலீஸார் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளிக்கவே, இந்த மாநகராட்சி காப்பகத்தில் விட்டனர்.

இங்கே ஆதரவற்றோருடன் ஆதரவற்றோராக இருந்து வரும் நீலகண்டன் என்பவருக்கு இந்தி உள்பட 13 மொழிகள் தெரியும். அவர் மூலமாக தாயிடம் பேச்சுக் கொடுக்க தன் பெயர் மல்லிகா. சொந்த ஊர் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சிம்லா. கணவன் துரத்தி விட்டான் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்.

அதை வைத்து டெல்லி போலீஸ், சிம்லா போலீஸ் என தொடர்பு கொண்டு பேசின பிறகும் இப்படி ஒரு பெண் காணாமல் போனதாக வழக்கு ஏதும் இல்லை எனக் கூறிவிட்டனர். இந்தப் பெண்ணும் இந்த இல்லத்திலிருந்து ஊருக்குப் போவதில் விருப்பம் காட்டவில்லை. அப்படியே நான்கு வருடமாக இங்கேயே இருந்து விட்ட குழந்தைதான் இங்குள்ள இல்லத்து வாசிகளுடன் பழகி தமிழை நன்றாகக் கற்றுக்கொண்டு விட்டது. இங்குள்ள பெரியவர்களுக்குத் தண்ணீர், மருந்து, டீ, காபி எது கேட்டாலும் போய் வாங்கி வந்து கொடுத்து உதவி செய்கிறது. எல்லோருடனும் தமிழிலேயே உரையாடுகிறது. அவளின் அம்மாவுக்கோ இந்தி தவிர வேறு எதுவும் தெரிவதில்லை.

தாயையும் மகளையும் இல்லத்தில் சந்தித்தேன். மல்லிகா கேட்ட கேள்விக்கெல்லாம் தலையைக் குனிந்து கொண்டே பதில் பேசாது அமர்ந்திருந்தார். எல்லா கேள்விகளுக்கும் ஜெயஸ்ரீயே பதிலளித்தாள். அதை அப்படியே மொழி பெயர்க்கிறார் நீலகண்டன்.

‘‘ஆப்கா நாம் க்யா ஹை ?’’
‘‘....!’’
ஹிஸ் கோன் ஹே கை?’’
‘‘... ... !’’
‘‘டெல்லி ஹையா?
‘‘நை ஜானா!’’
‘‘ஜிந்தா ஹே...?’’
ஏதோ முணுமுணுக்கிறார். அவரிடம் பேசியதில் கிரஹித்த விஷயங்களை மட்டும் சொல்கிறார் நீலகண்டன்.

‘‘வீட்டுக்காரர் உண்டாம். ஆனா மறந்துடுச்சாம். சொந்த ஊருக்குப் போக விருப்பமில்லையாம். இங்கேயே இருக்கிறாராம்!’’.

மல்லிகாவுக்கும், அவர் குழந்தைக்கும் தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. சாப்பிடுவது, துணி துவைப்பது, மாற்றுவது இதையெல்லாம் செய்யும் இவர் யாரிடமும் எதுவும் பேசுவதில்லையாம். குழந்தை மட்டுமே அத்தனை பேரிடமும் ஓடியாடி விளையாடி சளைக்காமல் பேசுகிறது. குழந்தை நல்ல அறிவாற்றலுடன் ஆரோக்கியத்துடன் இருப்பதால் 3 வயதிலேயே இல்லப் பொறுப்பாளர்கள் பக்கத்தில் உள்ள பள்ளியில் சேர்த்திருக்கிறார்கள். அதற்கு ஸ்கூல் பேக், நோட்டு புத்தகங்கள், சீருடை, இதர பொருட்கள் பள்ளிக்கட்டணம் உள்பட ஓர் அரசு அலுவலரே ஏற்றிருக்கிறார். குழந்தையும் நான்கைந்து நாட்கள் பள்ளிக்கு போயிருக்கிறது. ஆனால் தாய் அவளை விடவில்லையாம். பள்ளிக்கூடத்திற்கே சென்று கூட்டி வந்துவிட்டார். குழந்தையைப் படிக்க அனுப்ப மாட்டேன் என்றும் அடம் பிடித்திருக்கிறார். ஒரு நிமிடம் கூட குழந்தையை விட்டுப் பிரியாமல் காவல் காத்தும் இருக்கிறார். எனவே அப்போது பள்ளிக்கு குழந்தையை அனுப்பும் முயற்சியை கைவிட்டனர். இப்போது ஐந்து வயதாகி விட்டது. பக்கத்தில் உள்ள பள்ளியிலும் கொண்டு போய் சேர்த்து விட்டார்கள். அப்பவும் தாய் ‘மகளை விடாமல்’ ஒரே அழிச்சாட்டியம்.

‘‘ஸ்கூல் ஹெட் மாஸ்டர் இந்த அம்மாவை பள்ளிக்கூடத்துக்கே வந்து சத்துணவுக்கூடத்துல உட்கார்ந்துக்க சொல்றாங்க. சாப்பாடு குழந்தைக்கும் இவருக்கும் கூட கொடுக்கிறேங்கிறாங்க. பள்ளிக்கூடம் விட்டதும் நீயே குழந்தையை கூப்பிட்டுட்டுப் போலாம்னும் சொல்லிப் பார்த்தாங்க. ஆனா கேட்கவே மாட்டேங்குது. மகளைக் கட்டிப்பிடிச்சுட்டு ஒரே அழுகை. இன்னும் குழந்தைக்கு பள்ளிக்கூடம் அனுப்பற வயசு வரலைங்குது. ஊருக்கே கூட்டிட்டுப் போய் படிக்க வைக்கிறேன்குது. சரி, ஊரையாவது சொல்லுன்னு கேட்டா அதையும் உருப்படியா சொல்ல மாட்டேங்குது..,!’’ என்ன செய்யறதுன்னே தெரியலை. இவங்க சொந்தக்காரங்க யாராவது இருந்து கூட்டிட்டுப் போனாத்தான் உண்டு!’’ என்கிறார் இந்த விடுதியின் காப்பாளர் கங்காதரன்.

நானே அந்த தாயிடம் பேசுகிறேன். ‘‘ஏம்மா உம் பொண்ணு நல்ல பிரில்லியண்ட். கொடு படிக்க வைக்கிறோம். நாங்களே செலவு எல்லாம் செய்யறோம்!’’ அதை அப்படியே இந்தியில் மொழி பெயர்த்துச் சொல்கிறார் நீலகண்டன். உடனே குழந்தையைக் கட்டிப்பிடித்துக் கொண்டு ஏதேதோ இந்தியில் அவரிடம் சொல்கிறார்.

நீலகண்டன் மொழி பெயர்க்கிறார். ‘‘அதுக்கு இப்பத்தான் அஞ்சு வயசாம். பத்து வயசுலதான் பள்ளிக்கூடம் அனுப்பணுமாம். யாரும் தொந்தரவு செய்ய வேண்டாமாம்!’’ தாயின் பிடியில், ‘‘என்னை விடு, விடு!’’ என தமிழில் பரிதவிக்கிறாள் அந்த மழலை. தாயோ அவளை இந்தியில் ஏதோ சொல்லி அடக்குகிறார். திருதிரு என முழித்தபடி நம்மைப் பார்க்கிறது மழலை.

- கா.சு.வேலாயுதன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in