Published : 16 Aug 2019 04:09 PM
Last Updated : 16 Aug 2019 04:09 PM

அத்திவரதர் தரிசனம் நீட்டிக்கப்படுமா?- அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் விளக்கம்

காஞ்சிபுரம்

அத்திவரதர் தரிசனம் நீட்டிக்கப்படுமா என்பது குறித்து இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் வைபவத்தில் பொது தரிசனம் இன்றுடன் (ஆக. 16) நிறைவு பெறுகிறது. எனவே நேற்று அதிகாலை 2 மணியில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு அத்திவரதரை தரிசிக்க சாலைகளில் காத்திருந்தனர்.

அதேபோல இன்றும் பொதுமக்கள் கூட்டமாக வரிசையில் நின்று அத்திவரதரைத் தரிசித்து வருகின்றனர். விஐபி தரிசனம் நண்பகல் 12 மணியுடன் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிடம் இருந்து கோரிக்கைகள் அதிகரித்து வருகின்றன.

இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், ''கடந்த காலங்களில் ஏற்கெனவே ஆகம விதிப்படி 48 நாட்கள் மட்டுமே காட்சி தந்தார். அதேபோல இந்த முறையும் அத்தி வரதர் தரிசனத்தை நீட்டிக்க முடியாது. அந்த வகையில் இன்று 47-வது நாள் ஆகிவிட்டது. நாளை 48-வது நாளில் ஆகம விதிகளின்படி, அனந்தசரஸ் குளத்துக்குள் அத்தி வரதர் வைக்கப்படுவார்.

இதற்கான ஏற்பாடுகள் முழுமையாக நடந்து முடிந்துவிட்டன. மாவட்ட நிர்வாகமும் அறநிலையத் துறையும் இணைந்து அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாகச் செய்துள்ளன. எவ்வளவு கூட்டம் இருந்தாலும் இன்று இரவு 12 மணி வரை பக்தர்கள் தரிசிக்கலாம்.

கோயில் தரிசனம் குறித்து முதல்வர் பழனிசாமி 3 முறை ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, சிறப்பான முன்னேற்பாடுகளைச் செய்ய ஆலோசனை வழங்கினார். இதையடுத்து பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் சிறப்பான முறையில் தரிசனம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது'' என்றார் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x