Published : 16 Aug 2019 03:57 PM
Last Updated : 16 Aug 2019 03:57 PM

காஷ்மீர் விவகாரம்; அண்ணாவின் கருத்தை ரஜினிகாந்த் சொல்லியிருக்கிறார்: அமைச்சர் செல்லூர் ராஜூ

அமைச்சர் செல்லூர் ராஜூ: கோப்புப்படம்

மதுரை

நாட்டின் பாதுகாப்பு குறித்த விஷயங்களை அரசியலாக்கக் கூடாது என நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கு ஆதரவளிப்பதாக, அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரை ராமைய்யா தெரு 90-வது வார்டில், ரூ.20 லட்சம் மதிப்பிலான கூட்டுறவு மையத்தை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று (ஆக.16) திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் 54,039 அங்கன்வாடிகள் இயங்கி வருவதாகவும், கடந்த 2013 முதல் 10,141 அங்கன்வாடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும் இந்த ஆண்டில் மட்டும் 1,133 அங்கன்வாடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பின்னர், அத்திவரதர் வைபவத்தை நீட்டிப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். ஆனால் இதுகுறித்து சாஸ்திர சம்பிரதாயங்கள் அடிப்படையில் ஆன்மிகப் பெரியவர்கள் தான் முடிவெடுக்க வேண்டும் எனக் கூறினார்.

ரஜினிகாந்த்: கோப்புப்படம்

இதையடுத்து, நாட்டின் பாதுகாப்பு குறித்த விஷயங்களை அரசியலாக்கக் கூடாது என ரஜினிகாந்த் கூறியது குறித்து பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, "இந்திய நாட்டின் பாதுகாப்பு என்ற அடிப்படையில், எல்லோரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், ரஜினிகாந்த் கருத்து கூறியிருக்கிறார். அண்ணா சொன்ன கருத்தை இன்றைக்கு ரஜினி, அவர் பாணியில் சொல்லியிருக்கிறார். அவர் கருத்தை வரவேற்கிறேன்", எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x