Published : 16 Jul 2015 11:31 AM
Last Updated : 16 Jul 2015 11:31 AM

பணியின் போது இறந்த மின்வாரிய ஊழியர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி

திருவண்ணாமலை, கன்னியாகுமரி மாவட்டங்களில் பணியின்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த மின்வாரிய ஊழியர்கள் குடும்பத்துக்கு முதல்வர் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நகர தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மின்கம்பியாளராகப் பணி புரிந்து வந்த வெள்ளை என்பவர் 24.4.2015 அன்று வந்தவாசியில் மின்கம்பத்தில் ஏறி பழுது பார்க்கும் பணியை மேற்கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கியதில் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்; கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், தக்கலை பிரிவு தமிழ்நாடு

மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மின்கம்பியாளராகப் பணி புரிந்து வந்த சுரேஷ் என்பவர் 25.4.2015 அன்று கோதநல்லூர் கிராமத்தில் மின்கம்பி விழுந்த மரத்தினை அகற்றும் பணியினை மேற்கொண்டிருந்த போது, மரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

இந்த துயரச் சம்பவங்களில் அகால மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் துயரச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்" எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x