Last Updated : 16 Aug, 2019 01:27 PM

 

Published : 16 Aug 2019 01:27 PM
Last Updated : 16 Aug 2019 01:27 PM

ராமநாதபுரம் - தூத்துக்குடி எரிவாயு குழாய் திட்ட அறிவிப்பாணைக்கான இடைக்கால தடை ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு

ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு எரிவாயு கொண்டு செல்வதற்கான குழாய் அமைப்பதற்காக, விவசாய நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த கே.செல்லம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.


அதில்," தெற்கு வீரபாண்டியபுரம் கிராமத்தில் சிப்காட் அமைப்பதற்காக ஏற்கெனவே ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் அரசால் கையகப்படுத்தப்பட்டன. இதுதவிர காற்றாலை அமைக்கவும், ரயில் பாதை அமைக்கவும் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

அரசு திட்டங்களுக்காக இதுவரை இந்தப் பகுதியில் 1500 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு குழாய் மூலம் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகம் செய்ய 700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

எண்ணூர் - திருவள்ளூர் - பெங்களூரு - புதுச்சேரி - நாகை - மதுரை - தூத்துக்குடி ஆகிய வழி தடத்திலேயே குழாய்கள் மூலம் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகம் செய்ய, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழங்கு முறை வாரியத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் முதல் தூத்துக்குடி வரையிலான பகுதி இந்த பட்டியலில் இடம் பெறவில்லை.

இந்த சூழலில் முறையான அனுமதி பெறாமல் ஒரு சில தனியார் நிறுவனங்களுக்கு எரிவாயு விநியோகம் செய்யும் நோக்கில் இந்தியன் ஆயில் கழகம் இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதற்கு முறையான சுற்றுச்சூழல் அனுமதியும் பெறப்படவில்லை.

ஆகவே முறையான அனுமதி பெறாமல் ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு எரிவாயு வழங்குவதற்கு குழாய் அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாக 2018 அக்டோபர் 5 மற்றும் 2019 பிப்ரவரி 18ல் மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

ஏற்கெனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதித்தும், பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயுத்துறை செயலர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர், பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு ஒழுங்கு முறை வாரிய செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு வரை எரிவாயு வழங்குவதற்கு குழாய் அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாக 2018 அக்டோபர் 5 மற்றும் 2019 பிப்ரவரி 18 ல் மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்ட
அறிவிப்பாணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

மேலும் இது குறித்து சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர், பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு ஒழுங்கு முறை வாரிய செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் மாதம் 2 வாரம் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x