Published : 16 Aug 2019 11:41 AM
Last Updated : 16 Aug 2019 11:41 AM

விடுதலை வீரர்கள் நாகப்ப படையாச்சி, ஆதிகேசவலு நாயக்கருக்கு மணிமண்டபம்: ராமதாஸ் வேண்டுகோள்

சென்னை

விடுதலை வீரர்கள் நாகப்ப படையாச்சி, ஆதிகேசவலு நாயக்கருக்கு தமிழக அரசு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "இந்திய சுதந்திர தினத்தையொட்டி, சென்னை கோட்டைக் கொத்தளத்தில் தேசியக்கொடியேற்றி வைத்துப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்திய விடுதலைக்காக பாடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த தலைவர்கள் குறித்தும், அவர்களுக்கு செய்யப்பட வேண்டிய மரியாதை குறித்தும் விளக்கியிருக்கிறார்.

ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய தமிழகத்தைச் சேர்ந்த தலைவர்கள் பட்டியலில் மாயூரம் நாகப்பன் படையாட்சி, சர்தார் ஆதிகேசவலு நாயக்கர், செங்கல்பட்டு அருகே திருவிடைச்சுரத்தினை ஆண்ட இரட்டை மன்னர்கள் காந்தவராயன், சேந்தவராயன் ஆகியோரின் பெயரையும் முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

கடந்த காலங்களில் சுதந்திர தின விழாக்களில் இவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படாத நிலையில், இப்போது அவர்களின் பெயர்களை முதல்வர் குறிப்பிட்டிருப்பது, அவர்களின் தியாகத்தை தமிழக அரசு அங்கீகரித்திருப்பதையே காட்டுகிறது. இது வரவேற்கத்தக்க முன்னேற்றம் ஆகும்.

அதேநேரத்தில், விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு தமிழக அரசு நிறுவியுள்ளதாக முதல்வர் கூறிய 35 மணி மண்டபங்கள், மற்றும் ஏராளமான உருவச் சிலைகளில் ஒன்று கூட நாகப்ப படையாட்சி, சர்தார் ஆதிகேசவலு நாயக்கர் ஆகியோருடையது இல்லை என்பது வருத்தமளிக்கிறது.

காலனி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் நாகப்பன் படையாட்சி, சர்தார் ஆதிகேசவலு நாயக்கர் ஆகியோரின் பங்களிப்புகள் ஈடு இணையற்றவை. விடுதலைப் போராட்டத்தின் போது தென்னாப்பிரிக்காவில் நாகப்பன் படையாட்சியும், தமிழகத்தில் சர்தார் ஆதிகேசவலு நாயக்கரும் காந்தியின் தளபதிகளாக திகழ்ந்தவர்கள்.

1906 ஆம் ஆண்டு டிரான்சுவால் காலனி அரசாங்கம் அங்கு வாழ்ந்த இந்தியர்கள் தமது பெயரை அரசாங்கத்திடம் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று கூறும் ஏசியாடிக் பதிவு சட்டத்தை கொண்டுவந்தது. இச்சட்டம் இந்தியர்களை துன்புறுத்துவதாகவும் கண்ணியத்தை குலைப்பதாகவும் இருப்பதாகக் கூறிய காந்தி, இந்தியர்கள் அதனை எதிர்க்க அழைப்பு விடுத்தார்.

அதை ஏற்று ஏசியாடிக் பதிவு சட்டத்தை எதிர்த்து போராடிய நாகப்பன் படையாட்சி 1909 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21 ஆம் நாள் கைது செய்யப்பட்டு 10 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலும் ஆங்கிலேயரை எதிர்த்ததால் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டார். 10 நாள் கொடுமைக்குப் பிறகு ஜூன் 30 ஆம் நாள் விடுதலை செய்யப்பட்ட அவர், சித்திரவதையின் விளைவுகளால் ஜூலை 6 ஆம் தேதி உயிரிழந்தார்.

சத்தியாகிரகப் போராட்டத்தில் உயிர்நீத்த முதல் தியாகி சாமி நாகப்ப படையாட்சியின் வீரமரணம் மகாத்மா காந்தியின் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது. அதன்பின் வெவ்வேறு காலகட்டங்களில் தமது மகன் சிறை சென்றதையும், தமது சகோதரர் இறந்ததையும் சுட்டிக்காட்டிய காந்தியடிகள், எனினும் நாகப்ப படையாட்சியின் உயிரிழப்பு ஏற்படுத்திய வலியுடன் ஒப்பிடும்போது இவை பெரிதல்ல என்று கூறினார்.

நாகப்ப படையாட்சியின் தியாகத்தை வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் பதிவு செய்த காந்தியடிகள், 1914 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் நாள், தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பும் முன் தமது கடைசி நிகழ்ச்சியாக ஜொகனஸ்பர்க் நகரின் பிராம்ஃபோன்டெய்ன் கல்லறைத் தோட்டத்தில் சாமி நாகப்ப படையாட்சியின் நினைவிடத்தை திறந்துவைத்தார். அந்த அளவுக்கு நாகப்ப படையாட்சியின் தியாகத்தை காந்தியடிகள் போற்றினார்.

மற்றொருபுறம் தமிழகத்தில் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தவர்களில் முக்கியமானவரான சர்தார் ஆதிகேசவலு நாயக்கர், 1921 ஆம் ஆண்டு காந்தியடிகளை முதன்முதலாக சென்னைக்கு அழைத்து வந்து போராட்டம் நடத்தினார். பின்னர் காந்தி, நேரு ஆகியோரை பல்வேறு தருணங்களில் தமிழகத்திற்கு அழைத்து வந்து விடுதலைப் போராட்டத்தை பரப்பியவர்.

வரிகொடா இயக்கம் நடத்தியதற்காக சென்னை சென்ட்ரல் தொடர்வண்டி நிலையம் அருகிலுள்ள பல்லாயிரம் கோடி மதிப்புள்ள நிலங்களை வெள்ளையர்களிடம் இழந்தவர். பலமுறை கைது செய்யப்பட்டு 11 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தவர். தமிழகத்தில் வேறு எந்த தலைவரும் இவ்வளவு காலம் தண்டனை அனுபவித்ததில்லை.

விடுதலைப் போராட்டத்தில் ஆதிகேசவலு நாயக்கரின் வீரத்தையும், தீரத்தையும் பார்த்து வியந்த காந்தியடிகள், அவருக்கு சர்தார் பட்டத்தை வழங்கினார். சர்தார் வல்லபாய் படேலுக்கு இணையாக இந்த பட்டத்தை காந்தியடிகளிடம் பெற்ற இரு தமிழர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மயிலாடுதுறை நாகப்ப படையாட்சி, சர்தார் ஆதிகேசவலு நாயக்கர் ஆகியோரின் சாதனைகளும், தியாகங்களும் இப்படிப்பட்டவையாக இருக்க, அவற்றை அங்கீகரிக்கும் வகையில் அரசுத் தரப்பில் எதுவும் செய்யப்படவில்லை.

இப்போது தான் அவர்களின் பெயர்கள் விடுதலைநாள் விழாவில் உச்சரிக்கப்பட்டு உள்ளன. இது போதுமானதல்ல. விடுதலை நாள் விழாவில் முதல்வரால் குறிப்பிடப்பட்ட மற்ற விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு மணி மண்டபம், உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மயிலாடுதுறை நாகப்பன் படையாட்சி, சர்தார் ஆதிகேசவலு நாயக்கர் ஆகியோருக்கும் இரட்டை மன்னர்கள் காந்தவராயன், சேந்தவராயன் ஆகியோருக்கும் திருவுருவச் சிலைகளுடன் கூடிய மணிமண்டபங்கள் அமைக்கப்படுவதுடன், அவர்களின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும்.

விடுதலைப் போரில் பல்வேறு தியாகங்களை செய்த சேலம் அர்த்தநாரீச வர்மா, கடலூர் அஞ்சலையம்மாள் உள்ளிட்ட தலைவர்களுக்கும் மணி மண்டபம், உருவச்சிலைகள் அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும்" என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x