Published : 16 Aug 2019 09:46 AM
Last Updated : 16 Aug 2019 09:46 AM

வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்படுவதற்கு மக்கள் வரவேற்பு: 20 ஆண்டுகால கோரிக்கை நிறைவேறியதாக மகிழ்ச்சி

வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடிய பாமகவினர்.படம்: வி.எம்.மணிநாதன்.

வ.செந்தில்குமார்

வேலூர்

வேலூர் மாவட்டத்தை மூன்றாகப் பிரிக்கும் அறிவிப்பை வரவேற்கும் விதமாக பொதுமக்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். மேலும், மாவட்டம் பிரிக்கப்பட்டால் நிர்வாகப் பணிகளில் தொய்வு இருக்காது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

வேலூர் மாவட்டம் 13 சட்டப்பேரவை தொகுதிகளுடன் 5,920 சதுர கி.மீ பரப்பளவுடன் 2-வது பெரிய மாவட்டமாக இருந்து வந்தது. வேலூர் மாவட்டத்தில் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் என வருவாய் கோட்டங்கள் இயங்கி வருகின்றன. வேலூர் மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக 3-ஆக பிரிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. குறிப்பாக, திருப்பத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்பது அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளாக இருந்து வந்தது. குறிப்பாக, வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரிக்கக் கோரி பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் கூட நடத்தப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்த வேலூர் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது வேலூர் மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக பிரிக்க பரிசீலனை செய்யப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். தேர்தல் முடிந்த நிலையில் வேலூர் மாவட்டம் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் என 3 மாவட்டங்களாக பிரிக்கப்படும் என்று சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் முதல்வர் அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து திருப்பத்தூரில் பாமக கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். வேலூரில் பாமகவின் முன்னாள் மத்திய இணை அமைச்சர் என்.டி.சண்முகம், எம்எல்ஏ கே.எல்.இளவழ கன் தலைமையில் இனிப்பு வழங்கினர்.

வேலூர் மாவட்டம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வடாற்காடு ஜில்லா என்றே அழைக்கப்பட்டது. சித்தூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய வடாற்காடு ஜில்லாவின் முதல் ஆட்சியராக 1801-1803 வரை ஜார்ஜ் ஸ்ட்ராடர்ன் இருந்துள்ளார். 1911-ம் ஆண்டு நிர்வாக வசதிக்காக வடாற்காடு ஜில்லாவில் இருந்து சித்தூர் ஜில்லா புதிதாக உருவாக்கப்பட்டது.

வேலூரை தலைமையிடமாகக் கொண்டு வடாற்காடு ஜில்லா இயங்கி வந்தது. வடாற்காடு ஜில்லா, திமுக ஆட்சிக் காலத்தில் வடாற்காடு மாவட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 12,108 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட வடாற்காடு மாவட்டம் 1989 அக்.1-ம் தேதி வடாற்காடு அம்பேத்கர் மாவட்டம், திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்டம் என 2-ஆக பிரிக்கப் பட்டன. 1997-ல் வடாற்காடு அம்பேத்கர் மாவட்டம், வேலூர் மாவட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. புதிதாக ஏற்படுத் தப்படும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக் கோணம், சோளிங்கர், ஆற்காடு, ராணிப் பேட்டை சட்டப்பேரவை தொகுதிகளும், வேலூர் மாவட்டத்தில் வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம் தொகுதிகளும், திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணி யம்பாடி, ஆம்பூர் சட்டப்பேரவை தொகுதி களும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

புதிய மாவட்டங்கள் பரப்பளவு மற்றும் மக்கள் தொகை அடிப்படையில் பிரிக்கப்படும் என்று கூறப்படுகிறது. எனவே, தேவைக்கு ஏற்ப அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து சில வட்டங்களை புதிய மாவட்டங்களுடன் இணைக்கப்படும் என்றும் வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரிப்பது சவால் நிறைந்த பணியாக இருக்கும் என்று வருவாய்த் துறையினர் தெரிவித்தனர். விரைவில், மாவட்டம் பிரிப்பதற்கான பணிகளை மேற்கொள்ள தனி அதிகாரிகள் நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் அவர்கள் கூறினர்..

வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரிக்கப் பட்டது குறித்து சமூக ஆர்வலர் அம்பலூர் அசோகன் கூறும்போது, ‘‘வரவேற்கத்தக்க முடிவாக இருந்தாலும் மாவட்டத்தின் மையப் பகுதியில் தலைநகரம் இருக்க வேண் டும். 20 ஆண்டுகள் கோரிக்கை நிறை வேறியது மகிழ்ச்சியளிக்கிறது’’ என்றார்.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் வேலூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் சுபாஷ் கூறும்போது, ‘‘மாவட்டத்தை மூன்றாக பிரிப்பதால் அரசின் திட்டப் பணிகளை சுலபமாக கவனிக்க முடியும். அரசுப் பணிகளில் தொய்வு இருக்காது. மக்களுக்கும் நல்லதுதான்’’ என்றார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப் பின் வேலூர் மாவட்டச் செயலாளர் ஞான வேலு கூறும்போது, ‘‘மூன்றாக என்பதற்கு பதிலாக இரண்டாக பிரித்திருக்கலாம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x