Published : 16 Aug 2019 06:44 AM
Last Updated : 16 Aug 2019 06:44 AM

பழநி பஞ்சாமிர்தத்துக்கு புவிசார் குறியீடு; 1000 ஆண்டு பாரம்பரியத்தால் கிடைத்த அங்கீகாரம்: சர்வதேச தேடு பொருளாகும் தமிழக பிரசாதம்

பி.டி.ரவிச்சந்திரன்

பழநி 

தமிழகத்தில் கோயில் பிரசாதங் களில் முதன் முறையாக பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் பஞ்சாமிர்தத்துக்குப் புவிசார் குறியீடு வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முருகப் பெருமானின் ஆறு படை வீடுகளில் மூன்றாம் படை வீடு பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இங்கு முருகப் பெரு மான் கையில் தண்டத்துடன் காட்சி யளிப்பதால் தண்டாயுதபாணி என்று அழைக்கப்படுகிறார்.

மற்ற எந்த கோயில்களிலும் இல் லாத சிறப்பாக பழநி கோயிலுக்கு உள்ள தனிச் சிறப்பு பஞ்சாமிர் தம்தான். பாரம்பரியமிக்கப் பொருட் களுக்கு புவிசார் குறியீடு பெற விண்ணப்பிப்பது போல் தனிச் சிறப்பு வாய்ந்த பழநி பஞ்சாமிர்தத் துக்கும் புவிசார் குறியீடு பெற 2016-ம் ஆண்டு கோயில் நிர்வாகம் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது.

பாரம்பரியம், தொன்மை, 100 ஆண்டுகளுக்கும் மேலான சிறப்பு எனப் புவிசார் குறியீடு பெற அனைத்துத் தகுதிகளும் உள்ள பஞ்சாமிர்தத்துக்கு விரைவில் புவிசார் குறியீடு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு பக்தர்கள் மத்தியில் இருந்தது. இந்தத் தகுதி விரைவில் கிடைக்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

அமிர்தங்களின் கலவை

5 அமிர்தங்கள் சேர்ந்த கலவை தான் பஞ்சாமிர்தம். நவபாஷான சிலையை உருவாக்கிய சித்தர் போகர் தண்டாயுதபாணி சுவாமிக்கு பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய் துள்ளார். அந்த அளவு பாரம்பரியம் கொண்ட பஞ்சாமிர்தம் இன்றளவும் மக்கள் மத்தியில் பிரபலமான பிரசாதமாக உள்ளது.

மலை வாழைப்பழம், தேன், நெய், பேரீச்சம் பழம், நாட்டுச் சர்க்கரை ஆகிய 5 பொருட்களைக் கொண்டு பஞ்சாமிர்தம் தயாரிக்கப்படுகிறது. பழநி கோயில் நிர்வாகம் மட்டுமின்றி தனியார் சிலரும் பஞ்சாமிர்தம் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு புவிசார் குறியீடு பெறுவதன் மூலம் நம் நாட்டில் ஏற்கெனவே புகழ் பெற்ற பஞ்சாமிர்தம் இனி சர்வதேச அளவில் தேடும் பொருளாக மாறிவிடும்.

இதுகுறித்து பழநி தண்டாயுத பாணி சுவாமி கோயில் நிர்வாகத் தினர் கூறியதாவது: பழநி பஞ்சாமிர் தத்துக்கு புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. தொன்மை நிறைந்தது என்பதை சான்றுகளுடன் நிரூபித்துவிட்டோம். அதை ஏற்றுக் கொண்டுள்ளனர். எனவே புவிசார் குறியீடு கிடைப்பது உறுதி. புவிசார் குறியீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வருவது மகிழ்ச்சியளிக்கிறது என்றனர்.

இந்த ஆண்டு கொடைக்கானல் மலைப்பூண்டைத் தொடர்ந்து தற்போது பழநி பஞ்சாமிர்தத்துக்கு புவிசார் குறியீடு கிடைக்க இருப்பது திண்டுக்கல் மாவட்ட மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

புவிசார் குறியீடு வழங்க காரணம்

சித்தர்கள் காலம் முதல் பயன்படுத்தப்பட்ட பஞ்சாமிர்தம் பாரம்பரியம் மிக்கது, தொன்மையானது, ஆயிரம் ஆண்டு களுக்கு மேல் பழமையானது என்பதற்கான சான்றுகளைக் கொண்டு புவிசார் குறியீட்டுக்கு விண்ணப்பிக்கப்பட்டது. புவிசார் குறியீடு வழங்கும் குழுவினர் ஆய்வு செய்து ஆதாரங்கள் உண்மையாக இருப்பதை உறுதி செய்தனர்.

இதையடுத்து பஞ்சாமிர்தத்துக்கு புவிசார் குறியீடு வழங்க யாருக்கேனும் ஆட்சேபம் உள்ளதா என்பதைத் தெரிவிக்க ஆக.12-ம் தேதி வரை காலஅவகாசம் கொடுத்திருந்தனர். ஆனால் யாரும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. இதையடுத்து முறைப்படி விரைவில் சான்றிதழ் வழங்கப்பட்டு பழநி பஞ்சாமிர்தத்துக்கு புவிசார் குறியீடு கிடைக்க உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x