Published : 15 Aug 2019 04:20 PM
Last Updated : 15 Aug 2019 04:20 PM

சுதந்திர இந்தியாவின் முதல் அஞ்சல் தலை; பொக்கிஷமாய் பாதுகாக்கும் குமரி இளைஞர்

நாகர்கோவில்

வரலாற்றுப் பெருமைகளைத் தாங்கி நிற்கும், அரியவகை தபால் முத்திரைகள் சேகரிப்பு, தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாளைக் குறிப்பிடும் எண்களைக் கொண்ட பணத் தாள்களைச் சேகரிப்பது, சுதந்திர இந்தியாவின் முதல் அஞ்சல் தலையைப் பொக்கிஷமாய் பராமரிப்பது என பணத்தாள், தபால் தலை சேகரிப்புப் பழக்கத்தை நீண்டகாலமாகக் கடைபிடித்து வருகின்றார் நாகர்கோவிலைச் சேர்ந்த நபர். இதற்காக அவர் இந்தியா முழுவதும் தொடர்ந்து பயணித்து வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

மக்களின் குடும்ப உறவுகளுக்கிடையிலான தொடர்பு, அலுவல் உள்ளிட்ட தகவல்களைக் குறைவான செலவில் சுமந்து செல்லும் முக்கியப் பணியினை இந்திய அஞ்சல்துறை செய்து வருகின்றது. இந்திய அஞ்சல் துறையின் தலைகளை (stamp) பலவகைகளிலும் சேகரித்து வைப்போர் உண்டு. அதேபோல் ஒருஇடத்தில் இருந்து, இன்னொரு இடத்திற்கு கடிதம் சென்று சேர்ந்ததும், அந்த ஊரில் உள்ள அஞ்சலகத்தின் மூலம் அந்த தபால் வந்து சேர்ந்ததற்கான முத்திரை குத்தப்படும். அதேபோல் தபால் அனுப்பப்பட்ட இடத்திலும் ஒரு முத்திரை குத்தப்படும். இந்த முத்திரை இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களில் உள்ள, அனைத்து அஞ்சலகங்களிலுமே குத்தப்பட்டாலும் அதிலும் ஒரு சிறப்புத்தன்மை உண்டு.

கன்னியாகுமரி அஞ்சல் நிலையத்தில் விவேகானந்தர் நினைவிடம், மகாபலிபுரத்தில் சிற்பங்கள் என அந்தந்த ஊர்களின் அடையாளத்தைத் தாங்கி முத்திரை இடம் பெற்றிருக்கும். இந்தியா முழுமைக்கும் சேர்த்து 200-க்கும் மேற்பட்ட அஞ்சலகங்களில் இந்த தனித்த முத்திரைகள் உண்டு. இவற்றை நாடு முழுவதும் பயணித்து, சேகரித்து, அவற்றைக் கண்காட்சியாகவும் வைத்து வருகிறார் நாகர்கோவில் கோட்டாறை சேர்ந்த பி.குமாரசுவாமி (45). இதேபோல் சுதந்திர இந்தியாவின் முதல் அஞ்சல் தலைகளையும் இவர் பொக்கிஷமாகப் பராமரித்து வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

''நான் ஏற்கெனவே அரிய வகை நாணயங்கள், உள்நாட்டு, வெளிநாட்டுப் பணத்தாள்களையும் அதிக அளவில் சேகரித்துள்ளேன். தொடர்ந்து அடுத்தகட்டமாக இந்த அஞ்சல் முத்திரைகளையும் விரும்பிச் சேகரித்து வருகிறேன். திருச்சியில் மலைக்கோட்டை முத்திரை குத்தப்பட்டுத்தான் அங்கிருந்து கடிதங்கள் செல்லும். இதுபோன்று ஊரின் அடையாளங்களையே முத்திரையில் தாங்கி, தமிழகத்தில் 34 அஞ்சலகங்கள் உள்ளன. அவை அனைத்தையும் சேகரித்து விட்டேன்.

இதேபோல் கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் உள்ள அஞ்சல் நிலையங்களுக்கும் நேரிலேயே சென்று இந்த முத்திரை குத்தப்பட்ட அஞ்சல் அட்டைகளைச் சேகரித்து வைத்துள்ளேன். வடஇந்தியாவுக்கும் இதற்காகவே பலமுறை பயணித்துள்ளேன். இதுவரை இந்தியா முழுவதிலும் இருந்து 130 எம்ப்ளம் தாங்கிய அஞ்சல் முத்திரைகளை வாங்கியுள்ளேன். நேரில் செல்ல சாத்தியப்படாத சில இடங்கள் இருக்கும். அப்போது எனது நோக்கத்தைக் குறிப்பிட்டு, சம்பந்தப்பட்ட அஞ்சலகத்திற்கே கடிதம் அனுப்புவேன். அதில் திரும்பி எனக்கு கடிதம் அனுப்ப வேண்டியமைக்கு கவர், ஸ்டாம்ப் ஒட்டி எனது முகவரியும் எழுதிவிடுவேன். சில நல்லுள்ளம் கொண்ட அஞ்சல் பணியாளர்கள் சேகரிப்பின் முக்கியத்துவம் உணர்ந்து, முத்திரை குத்திய அஞ்சல் அட்டையை கவரில் வைத்து அனுப்பி விடுவார்கள்.

இந்த முத்திரைகள் அந்தந்த ஊர்களின் வரலாற்றைத் தாங்கி நிற்பவை. ஒரு மணி நேரம் பேசுவதை, பக்கம், பக்கமாக எழுதிச் சொல்வதை இந்த முத்திரைகள் நொடிப்பொழுதில் உணர்த்திவிடும். என்னிடம் ஏராளமான அரியவகை அஞ்சல்தலைகள் இருந்தாலும் சுதந்திர இந்தியாவில் முதன்முதலில் வெளியிடப்பட்ட அஞ்சல்தலைகளைச் சேமிக்க மிகவும் சிரமப்பட்டேன். இதற்காகவே இந்தியா முழுவதும் அலைந்தேன்.

அப்போது கேரளாவில் அதை ஒருவர் வைத்திருப்பதாகத் தகவல் கிடைத்தது. கேரளாவிலேயே ரூம் எடுத்துத் தங்கி அவரிடம் நல்ல பெயர் வாங்கி அந்த ஸ்டாம்ப்பை வாங்கிக்கொண்டு வந்தேன். என்னதான் வித, விதமாக சேமித்தாலும் என்னோட பெஸ்ட் கலெக்‌ஷன் அதுதான்'' என்கிறார் குமாரசுவாமி.

குமாரசுவாமியிடம் 1947-ல் சுதந்திர தினத்தன்று இந்திய தேசியக்கொடி பட்டொளி வீசிப் பறப்பதைக் குறிப்பதுபோல் அஞ்சல் துறை, அதே ஆண்டு நவம்பர் 21-ம் தேதி வெளியிட்ட மூன்றரை அணா மதிப்பிலான அஞ்சல் தலை, டிசம்பர் 15-ம் தேதி வெளியிடப்பட்ட ஒன்றரை அணா மதிப்பிலான அஞ்சல் தலை, அஞ்சல் தலை வெளியிட்ட உறை ஆகியவையும் இருக்கிறது. இதேபோல் காமராஜர், எம்.ஜி.ஆர், ராஜாஜி, அண்ணாதுரை ஆகியோரின் பிறந்த, இறந்த நாளைக் குறிக்கும் பணத்தாள்களையும் சேகரித்து வைத்திருக்கிறார் குமாரசுவாமி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x