

புதுச்சேரி
புதுச்சேரியில் சுதந்திர தினத்தையொட்டி கடலிலும் தேசியக் கொடியை ஏற்றி, வித்தியாசமான முறையில் பலர் கொண்டாடினர்.
நாட்டின் 73-வது சுதந்திர தினம் இன்று (ஆக.15) இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. வழக்கமாக நிலத்திலும் மலை உச்சியிலும் தேசியக்கொடி பறப்பது பரவசத்தை ஏற்படுத்தும். புதுச்சேரியில் கடலிலும் தேசியக்கொடியை ஏற்றுதல் மற்றும் வலம் வருதல் நிகழ்வுகளும் நடைபெற்றன.
புதுச்சேரியைச் சேர்ந்த மூன்று ஆழ்கடல் நீச்சல் வீரர்களான நவீன் குமார், ரஞ்சித் குமார், மணிகண்டன் ஆகியோர் தேசப்பற்றினை அனைவரிடத்திலும் உணர்த்தும் விதமாக புதுச்சேரியில் உள்ள வங்கக் கடலில் 80 அடி ஆழத்தில் 3 கிலோ மீட்டர் தொலைவு வரை தேசியக் கொடியை கையில் ஏந்தியவாறு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இப்பயணம் தொடர்பாக அவர்கள் கூறுகையில், சுதந்திரத்துக்காகப் போராடியோர் தியாகங்களை நாம் என்றென்றும் நினைவில் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவே இப்பயணத்தை மேற்கொண்டதாக குறிப்பிட்டனர்.
தேசியக் கொடியுடன் கொண்டாட்டம்:
புதுச்சேரியில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சியை அளித்து வரும் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த அரவிந்த், தேங்காய்த்திட்டு துறைமுகத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவு வரை சென்று 60 அடி ஆழத்தில் தேசியக் கொடியை ஏற்றி சக வீரர்களுடன் சுதந்திர தினத்தைக் கொண்டாடினார்.
நிலத்தின் மேற்பரப்பை சுத்தமாக வைத்திருப்பது போல் கடலின் ஆழ்பகுதியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த நிகழ்ச்சியை நடத்தியதாக அரவிந்த் தெரிவித்துள்ளார்.
செ.ஞானபிரகாஷ்