

சென்னை,
தேசியக் கொடியினை ஏற்றிவைத்த சென்னை மாநகராட்சி ஆணையர், கூடுதலாக மாணவர்களைப் பள்ளியில் சேர்த்த சென்னை பள்ளித் தலைமை ஆசிரியர்கள், சிறப்பாகப் பணியாற்றிய மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
சென்னை மாநகராட்சியில் இந்திய சுதந்திர தினவிழா இன்று (15.08.2019) சிறப்பாக நடைபெற்றது. பெருநகர சென்னை மாநகராட்சி, ரிப்பன் கட்டிட வளாகத்தில் ஆணையர் பிரகாஷ், தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் தேசிய மாணவர் படை, கலர் பார்ட்டி, சாரண, சாரணியர் மற்றும் வாத்தியக் குழுக்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, 4 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களின் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் சிறப்பாகச் சேவையாற்றிய சமுதாய அமைப்பாளர்கள் மற்றும் சமுதாய வளப் பயிற்றுநர்களைப் பாராட்டி கேடயங்களையும், எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தில் சிறப்பாகப் பணிபுரிந்த 3 பணியாளர்களுக்கு காசோலை மற்றும் சான்றிதழ்களையும், பெருநகர சென்னை மாநகராட்சியில் சிறப்பாகப் பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் 64 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, கடந்த 5 ஆண்டுகளில் அதிகபட்ச மாணவர் சேர்க்கையை விட இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையை அதிகரித்த 71 சென்னைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் கடந்த ஆண்டைவிட நடப்புக் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை அதிகரித்த 87 சென்னைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களையும் பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார்.
மேலும், 2018-19 ஆம் கல்வியாண்டில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 25 சென்னைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், 100 சதவீதம் மதிப்பெண் பெறுவதற்கு உறுதுணையாக இருந்த 5 ஆசிரியர்கள் மற்றும் 100 சதவீதம் மதிப்பெண் பெற்ற 5 மாணவ, மாணவியர்களைப் பாராட்டி, சான்றிதழ்களை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, அணிவகுப்பில் கலந்துகொண்ட தேசிய மாணவர் படை, சாரண, சாரணியர், கலர் பார்ட்டி மற்றும் வாத்தியக் குழுக்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களுக்கும், கலை நிகழ்ச்சிகளில் பங்குபெற்ற மாணவ/ மணவியர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் இணை ஆணையர் (வருவாய் (ம) நிதி) லலிதா, துணை ஆணையர்கள், முதன்மை தலைமைப் பொறியாளர், தலைமைப் பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்கள், சென்னை மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.