காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் 3 பேருக்கு சுதந்திரம் மறுக்கப்படுவது ஏன்? - ப.சிதம்பரம் கேள்வி

ப.சிதம்பரம்: கோப்புப்படம்
ப.சிதம்பரம்: கோப்புப்படம்
Updated on
2 min read

சென்னை

காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் 3 பேருக்கு சுதந்திரம் மறுக்கப்படுவது ஏன்? என, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டின் 73-வது சுதந்திர தினம் இன்று (ஆக.25) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றி சுதந்திர தின உரையாற்றினார். அதேபோன்று, தமிழகத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றி வைத்து, சுதந்திர தின உரையாற்றினார். மேலும், பல அரசியல் கட்சித் தலைவர்கள் சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சுதந்திர தினத்தன்று, காஷ்மீரில் முன்னாள் முதல்வர்களுக்கு சுதந்திரம் மறுக்கப்படுவது ஏன் என, முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "ஆகஸ்ட் 6-ம் தேதியில் இருந்து, ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் 3 பேருக்கு சுதந்திரம் மறுக்கப்படுவது ஏன்? அவர்களில் இரண்டு பேர் தனிமைச் சிறையிலும், ஒருவர் வீட்டுச் சிறையிலும் ஏன் இருக்க வேண்டும்? பிரிவினைவாதிகளையும் தீவிரவாதிகளையும் எதிர்த்துப் போராடிய அரசியல் தலைவர்கள் ஏன் அடைக்கப்பட்டிருக்க வேண்டும்?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

ப.சிதம்பரம் ட்வீட்

மேலும், காஷ்மீர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஷா பெய்சல் கைது செய்யப்பட்டது குறித்தும் ப.சிதம்பரம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தன்னுடைய மற்றொரு பதிவில், "எல்லோருக்கும் சுதந்திர நாள் வாழ்த்துகள். அன்னிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடி நமக்கு விடுதலை பெற்றுத்தந்த சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு நம் வீர வணக்கம்.

சுதந்திர தினத்தன்று ஷா பெய்சலுக்கு ஏன் சுதந்திரம் மறுக்கப்படுகிறது? சில ஆண்டுகளுக்கு முன் அவர் ஐஏஎஸ் தேர்வில் அகில இந்தியாவில் முதலிடம் பெற்ற போது அவர் ஹீரோ, இன்று அவர் பொது அமைதிக்குக் கேடு விளைவிக்கக்கூடிய குற்றவாளியா?", என, ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஷா பெய்சல் குறித்த ட்வீட்

காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண உண்மையான அணுகுமுறையை மத்திய அரசு கடைபிடிக்கவில்லை என குற்றம் சாட்டி, கடந்த ஜனவரி மாதம் ஷா பெய்சல் தனது பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in