

சென்னை
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாட்டின் 73-வது சுதந்திர தினம் இன்று (ஆக.25) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றி சுதந்திர தின உரையாற்றினார். அதேபோன்று, தமிழகத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றி வைத்து, சுதந்திர தின உரையாற்றினார். மேலும், பல அரசியல் கட்சித் தலைவர்கள் சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "சுதந்திரத்தை அடைய நாம் கடினமான, ஆனால் விவேகமான பாதையைத் தேர்ந்தெடுத்தோம். இந்தப் பாதையைப் பின்பற்ற வைத்ததற்கு என் முன்னோர்களுக்கு நன்றி. நாங்கள் அதிலிருந்து பின்வாங்க மாட்டோம். இந்தியா வாழ்க", என கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.
கமல்ஹாசன் ட்வீட்
மேலும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கிராமங்களுக்கான கிராம சபை நடத்தப்படுவது போல் நகர மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் ஏரியா சபையை நடத்த வேண்டும் என்று அரசைக் கோரும் வண்ணம் அக்கட்சி சார்பில் மாதிரி ஏரியா சபைக் கூட்டம் நடத்தப்பட இருக்கிறது.