

என்.கணேஷ்ராஜ்
கம்பம்
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல்போக விளைச்சல் முடங்கியதால் வைக்கோல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கேரள வியாபாரிகள் இவற்றை வாங்க தொலைதூர மாவட்டங்களுக்குச் செல்கின்றனர்.
இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை உரிய நேரத்தில் பெய்யவில்லை. இதனால் பெரியாறு அணையின் நீர்மட்டமும் உயரவில்லை. இதைக் காரணம் காட்டி முதல்போக விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கவில்லை. எனவே கூடலூர், குமுளி, கம்பம், உத்தமபாளையம் முதல் பழனி செட்டிபட்டி வரையிலான 14,707 ஏக்கர் நிலங்கள் தரிசாகவே விடப்பட்டன. இதேபோல பேரணை முதல் கள்ளந்திரி வரையிலான 45 ஆயிரம் ஏக்கர் முதல்போக சாகு படியும் பாதிக்கப்பட்டது. இதனால் நெல் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்ட துடன் வைக்கோல் உற்பத்தியும் பாதிக்கப்பட்டது. ஒரு ஏக்கருக்கு 1.5 டன் வரை வைக்கோல் கிடைக்கும். 2.5 அடி உயரம் வளரும் நெல்லில் அறுவடையின் போது முக்கால் அடியில் கதிருடன் துண்டிக்கப்படும். மீதம் உள்ள தளிர் வைக்கோலாக மாற்றப்படும். இவற்றை அறுத்து காய வைத்து உலர் தீவனமாக மாற்றி உருண்டையாகச் சுருட்டி வைப்பர்.
இதனை கேரளா வியாபாரிகள் முன்பதிவு செய்து வாங்கிச் செல்வர். தற்போது முதல்போக சாகுபடி முடங்கியதால் நெல்லு டன் வைக்கோல் உற்பத்தியும் பாதித்துள்ளது. எனவே கேரள வியாபாரிகள் தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு வைக் கோல் வாங்கச் செல்கின்றனர்.
இதுகுறித்து ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன நீர் விவசாயிகள் சங்கத் தலைவர் அப்பாஸ் கூறியதாவது: முதல்போக சாகுபடி பாதிப்பால் ஒரு லட்சம் மூட்டைகள் நெல் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தொழிலாளர்களுக்கும் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. நெல் விளைச்சலில் விவசாயிகளுக்கு வைக்கோல் உபரி வருமானமாக இருக்கும். ஒரு ஏக்கருக்கு ரூ. 4 ஆயிரம் வரை கிடைக்கும். தற்போது இயந்திர அறுப்பு என்பதால் வைக்கோலின் நீளம் குறைந்து சேதமும் அதிகமாக உள்ளது. எனவே குறைந்தது ரூ. 2 ஆயிரமாவது கிடைக்கும். தற்போது இந்த வருமானமும் கிடைக்கவில்லை.
தற்போது அணையின் நீர்மட்டம் திருப்திகரமாக இருப்பதால் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் விதைநெல் பாவு செய்வதற்கு தண்ணீரை திறக்க வேண்டும். இதன் மூலம் அடுத்த போகத்திலாவது நெல் விவசாயம் உரிய நேரத்தில் தொடங்க ஏதுவாக இருக்கும் என்றார்.