நெல்லை சீமையில் சுதந்திர தீ மூட்டிய தம்பதி: கொடூர தாக்குதலும், கடுங்காவலும் அசைத்து பார்க்காத வரலாறு

நெல்லை சீமையில் சுதந்திர தீ மூட்டிய தம்பதி: கொடூர தாக்குதலும், கடுங்காவலும் அசைத்து பார்க்காத வரலாறு
Updated on
2 min read

அ. அருள்தாசன்

திருநெல்வேலி

கொடூர தாக்குதல், பல ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை என சித்ரவதைகள் அனுபவித்தபோதும் சுதந்திர தீயை நெல்லைச் சீமையில் வேகமாக பரவச் செய்த தம்பதியின் தியாகத்தை இந்த சுதந்திர தின நாளில் நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும்.

தூத்துக்குடியைச் சேர்ந்த கந்தசாமி தேவர் 1902-ல் பிறந்தவர். 1923-ல் காங்கிரஸில் உறுப்பினராகி, 1928-ல் கிராமம்தோறும் காங்கிரஸ் திட்டங்களை விளக்கி பிரச்சாரம் செய்தார். 1932-ல் தூத்துக்குடியில் நடைபெற்ற சுதந்திர போராட்ட மறியலுக்கு தலைமை வகித்ததால் திருச்சி சிறையில் 15 மாதம் கடுங்காவல் தண்டனை அனுபவித்தார். 1942 வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டு 1 மாதம் சிறையில் அடைக்கப்பட்டார்.

இவரது முதல் மனைவி ஜானகி அம்மாள். கணவர் வழியில் இவரும் திருமணம் முடித்த கையோடு 1930-ல் நடைபெற்ற சட்ட மறுப்பு இயக்கத்தில் ஈடுபட்டு, மறியல் செய்ததன் காரணமாக தூத்துக்குடி சப்- கலெக்டரால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் கண்ணனூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

லண்டனுக்கு ஓடிப்போ

1933-ல் வைஸ்ராய் வெலிங்டன் பிரபுவை எதிர்த்து, ‘லண்டனுக்கு ஓடிப்போ’ என்று ஊரெங்கும் தட்டிபோர்டு எழுதி வைத்ததற்காக ஜானகி அம்மாள் கைது செய்யப்பட்டு, தூத்துக்குடி முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டால் 18 மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு சிறை சென்றார். இவரது சகோதரர் சண்முக சுந்தரமும் விடுதலை இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்றுள்ளார்.

அப்போதைய ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் தம்பதி சமேதமாக சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றதற்காகவும், மாவட்டத்தில் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற மகளிரில், ஜானகி அம்மாள் மட்டும் அதிக ஆண்டு சிறையில் இருந்தார் என்பதற்காகவும், 1972-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற சுதந்திர தின வெள்ளி விழாவின்போது, கந்தசாமி தேவரும், ஜானகி அம்மாளும் பிரதமர் இந்திரா காந்தியால் தாமிர பட்டயம் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். 1982-ல் கந்தசாமி தேவர் மறைந்த நிலையில், திருநெல்வேலியில் தற்போது வசிக்கும் அவரின் மூத்த வாரிசான கே.சுடலைமணி (77) சுதந்திர தின விழாக்களில் அரசால் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்படுகிறார்.

கர்ப்பம் கலைந்தது

சுதந்திர போராட்ட களத்தில் தமது பெற்றோர் புரிந்த தியாகம் குறித்து சுடலைமணி நினைவுகூர்ந்தார்.

அவர் கூறியதாவது:

போராட்ட களத்தில் ஏற்பட்ட ஒரு சம்பவம் எனது தாயார் ஜானகி அம்மாளின் வாழ்க்கை முறையை மாற்றிப்போட்டது. போராட்டத்தின்போது பெண் என்றும் பாராமல் சாலையில் அவரை தரதரவென இழுத்ததாலும், குண்டாந்தடியால் வயிற்றில் அடித்ததாலும் அவரது கர்ப்பம் கலைந்தது. போலீஸாரின் தாக்குதலை பார்த்து அதை தடுக்க முற்பட்ட எனது தந்தை கந்தசாமி தேவரும் குண்டாந்தடிகளால் தாக்கப்பட்டார். அதில் அவரது செவிப்பறை கிழிந்து ரத்தம் வழிந்தது. இதனால் காது கேட்காமல் ஆனது. இந்நிலையில்தான் அவருக்கு வாரிசு இல்லாமல் போகக்கூடாது என்று நினைத்த ஜானகி அம்மாள், கந்தசாமி தேவருக்கு 2-ம் தாரமாக சிவநாத வடிவு அம்மாளை திருமணம் செய்து வைத்தார். சிவநாதவடிவு அம்மாளின் மூத்த மகன் நான்.

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு சுதந்திரத்துக்கு பின் மத்திய அரசால் 10 ஏக்கர் நிலம் தானமாக வழங்கப்பட்டது. தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியில் எனது பெற்றோருக்கு இடம் வழங்கப்பட்டது. அப்போது எங்கள் குடும்பம் வறுமையில் வாடியதால், தினசரி ஒன்றரை ரூபாய் ஊதியத்துக்கு கட்டிட பணிகளுக்கு எனது தந்தை சென்றுவந்தார். தாயார் ஜானகி அம்மாள் வீட்டு வேலைகளுக்கு சென்று வந்தார்.

நிலம் தானம்

இந்நிலையில் காந்தியின் சிஷ்யராக இருந்த வினோபாஜி, பூமிதானம் என்ற இயக்கத்தை தொடங்கினார். இந்த இயக்கத்துக்கு 3 ஏக்கர் 68 சென்ட் இடத்தை எனது தந்தை தானமாக கொடுத்தார். பின்னர் பாரத சிமென்ட்ஸ் ஒர்க்ஸ் என்ற பெயரில் சிமென்ட் பொருட்களை தயாரித்து விற்பனை செய்தார். தூத்துக்குடி டூவிபுரம் 5-வது பிரதான சாலையில் விநாயகர் கோயிலை கட்டி, அந்த விநாயகருக்கு பாரத விநாயகர் என்று பெயர் சூட்டினார். அந்த கோயில் இப்போதும் அவரது பெயரை பறைசாற்றுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in