

அ.வேலுச்சாமி
திருச்சி
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட திருச்சி நீதிமன்றக் கட்டிடம் இன்றுடன் நூற்றாண்டை நிறைவு செய்யும் நிலையில், இதுவரை அரசு சார்பில் நூற் றாண்டு விழா எடுக்காதது வழக் கறிஞர்கள், சமூக ஆர்வலர் களிடையே வருத்தத்தையும், ஏமாற் றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் திருச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிகழக்கூடிய அனைத்து வகையான குற்றங்களையும் விசாரிப்பதற்காக 1804-ம் ஆண்டு வால்டர் கால்பீடு லேன்னனால் புத்தூர் பகுதியில்(தற்போதைய பிஷப் ஹீபர் பள்ளி வளாகம்) குற்றவியல் நீதிமன்றம் கட்டப்பட்டு, 100 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்தது.
பின்னர், திருச்சி நீதிமன்றத்துக் கென தனித்துவமான வளாகம் கட்ட முடிவெடுத்த ஆங்கிலேயர், கன்டோன்மென்ட் பகுதியில் பல நூறு ஏக்கர் இடத்தை தேர்வு செய்தனர். அங்கு இங்கிலாந்து அரசின் பாரம்பரிய கட்டிட வடிவமைப்புடன் ஏ.தாத்தா பிள்ளை என்ற ஒப்பந்ததாரர் மூலம் புதிய நீதிமன்றத்துக்கான கட்டுமானப் பணிகள் மேற்கொள் ளப்பட்டன. மின்சாரத்தை நம்பி இல்லாமல் சூரிய ஒளி மூலம் வெளிச்சம், இயற்கையான காற்று கிடைக்கப்பெறும் வகையில் நீதிமன்ற விசாரணை அறைகளும், லண்டனில் இருந்து கொண்டு வரப்பட்ட இரும்பு உத்திரங்கள், தூண்கள் மூலம் கட்டிடத்தின் மேற்கூரைகளும் அமைக்கப்பட்டன.
மேலும், தரைத்தளத்தில் இருந்து முதல் தளத்துக்குச் செல்ல மரப் பலகைகளால் ஆன இருபுற படிக்கட்டுகள் ஏற்படுத்தப்பட்டன. அழகிய வடிவமைப்புடன் கூடிய இக்கட்டிடத்தை 1919-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி அப்போதைய மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜே.ஜி.பர்ன் திறந்துவைத்தார். திருச்சி மட்டுமின்றி அரியலூர், கரூர் உட்பட அப்போதைய ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில் இருந்த அனைத்துப் பகுதிகளின் வழக்குகளும் இங்கு விசாரிக்கப்பட்டதால், ஆண்டு தோறும் பல ஆயிரக்கணக்கான வழக்குகள் குவிந்தன.
பின்னாளில் இக்கட்டிடத்தில் இடநெருக்கடியைத் தவிர்ப்பதற் காக குற்றவியல் நீதிமன்றங்கள், குடிமையியல் நீதிமன்றங்கள், விரைவு நீதிமன்றங்கள், மகளிர் நீதிமன்றம் உள்ளிட்டவை, இதே வளாகத்துக்குள் தனித்தனியாக கட்டப்பட்டன. தொடர்ந்து, புதிய ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டிடமும் கட்டப்பட்டது. எனினும் பாரம்பரியமிக்க, பழமையான கட்டிடத்தில் ஆவணக் காப்பகம், நீதிமன்ற நிர்வாக அலுவலகம், வங்கி உள்ளிட்டவை தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.
இந்தச் சூழலில் ஆங்கிலேயர் களால் கட்டப்பட்ட இந்தக் கட்டிடம், கடந்தாண்டு ஆக.16-ம் தேதி தனது நூற்றாண்டை தொடங்கியது. இதையொட்டி, தமிழ்நாடு அரசு சார்பில் நூற்றாண்டு விழா எடுக்க வேண்டும், கட்டிடத்தை பழமை மாறாமல் புதுப்பித்து பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வலியுறுத்தினர். ஆனால், இன்றுடன்(ஆக.15) இக்கட்டிடம் நூற்றாண்டை நிறைவு செய்யும் நிலையில், இதுவரை அரசு சார்பில் நூற்றாண்டு விழா எடுக்காதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து திருச்சி வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் செயலாளர் ஜே.கே.ஜெயசீலன் கூறும்போது, “திருச்சியிலுள்ள வரலாற்று சிறப்புமிக்க அடையா ளங்களுள் ஒன்றாக திகழும் இந்த நீதிமன்றக் கட்டிடத்தை பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவித்து, சிறப்பு நிதி ஒதுக்கி சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும், நூற்றாண்டு விழா எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கும், நீதித் துறைக்கும் வலியுறுத்தினோம். ஆனால், தற்போது வரை, நூற்றாண்டு விழா நடத்தப்படாதது ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் அளிக்கிறது. எனவே, இனிவரும் நாட்களிலாவது ஏதாவது ஒரு சிறப்பு நிகழ்வின் மூலம், இக்கட்டிடத்துக்கு பெருமை சேர்க்கும் செயலில் அரசு ஈடுபட வேண்டும்” என்றனர்.
திருச்சி வழக்கறிஞர்கள் சங்க செயலாளரான ஆர்.ராஜசேகர் கூறும்போது, “பாரம்பரியமான இக்கட்டிடத்துக்கு, வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நூற்றாண்டு விழா நடத்துவது தொடர்பாக பொதுக்கு ழுவில் பேசி முடிவெடுக்கப்படும்” என்றார்.