

எஸ்.கே.ரமேஷ்
கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், பெரும்பாலான விவசாயிகள் முதல் போக சாகுபடிக்கு நாற்று நடும் பணியைத் தொடங்க மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
கிருஷ்ணகிரி அணையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் டிசம்பர் வரை முதல்போக சாகுபடிக்கும், ஜனவரி முதல் மே மாதம் வரை 2-ம் போக சாகுபடிக்கும் தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துப் போனதால் கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து வெகுவாக சரிந்தது. மேலும், அணையில் மதகுகளை மாற்றியமைக்கும் பணிகள் நடைபெற உள்ளதால், அணையின் மொத்த கொள்ளவான 52 அடியில் 42 அடிக்கு மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது.
இதனிடையே, கடந்த மாதம் 5-ம் தேதி முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், அணைக்கு நீர்வரத்து குறைந்ததால், நீர்மட்டம் சரியத் தொடங்கியது. நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 29.60 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 79 கனஅடியாக இருந்தது.
இந்நிலையில் அணை பாசனத்தின் முதல்போக சாகுபடிக்காக 40 சதவீதம் விவசாயிகள் மட்டுமே தங்களது நிலத்தில் நெல் நாற்று நடவுப் பணிகளை தொடங்கியுள்ளனர்.
மீதமுள்ள 60 சதவீதம் விவசாயிகள் மழையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
இதுதொடர்பாக தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் கூறும் போது, ‘‘பெங்களூருவில் இருந்து வெளியேறும் கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு,அங்குள்ள ஏரிகளுக்கு கொண்டு செல்லப்படு கிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. எதிர்காலத்தில் மழை பெய்தால் மட்டுமே ஆற்றில் தண்ணீர் வரும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால், பருவ மழை கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் காத்திருக்கின்றனர்,’’ என்றார்.
பொதுப்பணித்துறை அலுவலர் கள் கூறும் போது, ‘‘கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் 29.60 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 79 கனஅடியாக உள்ளதால் ஓரளவிற்கு கால்வாயில் தண்ணீர் செல்கிறது. 28 அடிக்கு கீழ் தண்ணீர் குறைந்தால் பாசனக் கால்வாயில் தண்ணீர் செல்லாது,’’ என்றனர்.