Published : 15 Aug 2019 11:29 AM
Last Updated : 15 Aug 2019 11:29 AM

ஒகேனக்கல்லில் ஆபத்தான கல்விப் பயணம்: அரசு தீர்வு காண மாறுகொட்டாய் மக்கள் கோரிக்கை 

தருமபுரி

ஒகேனக்கல்லில் ஆபத்தான நிலையில் காவிரி ஆற்றைக் கடந்து குழந்தைகள் பள்ளிக்கு செல்கின்றனர்.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் மேற்கு பகுதியில் மாறு கொட்டாய் என்ற கிராமம் உள்ளது. இது, கர்நாடகா மாநிலம் கொள்ளேகால் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

இங்கு சுமார் 50 தமிழ்க் குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள், பொருட்கள் வாங்கவும், மருத்துவ தேவைக்கும், இவர்களின் குழந்தைகள் பள்ளி செல்லவும் 10 கி.மீட்டர் தொலைவில் உள்ள செங்கப்பாடி என்ற கர்நாடகா மாநில கிராமத்துக்கு தான் செல்ல வேண்டும். அதேநேரம், பரிசல் மூலம் காவிரி ஆற்றைக் கடந்தால் ஒகேனக்கல் நகரை அடைந்து விடலாம். 1 கிலோ மீட்டர் பயணத்தில் ஒகேனக்கல்லை அடைய முடியும்.

எனவே, மாறுகொட்டாயில் வசிக்கும் தமிழ்க் குடும்பத்தினர் ஒகேனக்கல் வந்து செல்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவர்களின் குழந்தைகள் பரிசல் மூலம் காவிரி ஆற்றைக் கடந்து நிலப்பரப்புக்கு வந்து தொங்கும் பாலம், அருவிக்கு செல்லும் நடைபாதை ஆகியவற்றின் வழியாக ஒகேனக்கல் நகரை அடைந்து விட்டால் அருகிலுள்ள ஊட்டமலை பள்ளிக்கு சென்று விட முடியும்.

உயர்நிலை வகுப்பைக் கடக்கும் குழந்தைகள் மேல்நிலை வகுப்புக்கு 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பென்னாகரத்துக்கு பேருந்தில் சென்று திரும்புகின்றனர். தினமும் இந்த வழியில் ஆபத்தான முறையில் தான் மாறுகொட்டாய் கிராம குழந்தைகள் தமிழகத்தில் உள்ள பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.

வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது பள்ளி செல்லாமல் வீட்டில் முடங்கி விடுகின்றனர்.

ஒகேனக்கல்லில் ஒருவார கால வெள்ளப்பெருக்குக்கு பின்னர் நேற்று காலை விநாடிக்கு 40 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து குறைந்ததால் பள்ளிக்கு சென்றனர். மாலையில், வீடு திரும்பும்போது நீர்வரத்து 60 ஆயிரம் கன அடியாக அதிகரித்ததால் அருவிக்கு செல்லும் நடைபாதையை கடந்து செல்ல இந்தக் குழந்தைகள் அச்சப்பட்டனர். எனவே, அப்பகுதியில் இருந்த பரிசல் ஓட்டுநர்களும், மீனவர்களும் குழந்தைகள் அப்பகுதியைக் கடந்து செல்ல உதவி செய்தனர். இந்த ஆபத்தான பயணத்துக்கு அரசு தீர்வு ஏற்படுத்த வேண்டுமென மாறுகொட்டாய் கிராம மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதுபற்றி சிலர் கூறும்போது, ‘கர்நாடகா மாநில நிலப்பரப்பில் வசிக்கும் தமிழ்க் குடும்பங்கள் என்பதால் மாறுகொட்டாய் கிராமத்தில் எங்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படுவதில்லை.

வேறு மாநில எல்லை என்பதால் தமிழக அரசும் அடிப்படை வசதிகளை செய்ய முடியாத நிலை உள்ளது. பொருட்கள், மருத்துவ வசதி, தமிழ் வழிக் கல்வி ஆகியவை அருகிலுள்ள ஒகேனக்கல்லில் கிடைப்பதால் எங்கள் மனம் அங்கு செல்வதையே நாடுகிறது. இருந்தபோது, தமிழக அரசு தலையிட்டு எங்கள் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்தினால் மகிழ்ச்சி யடைவோம்’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x