

ஈரோடு
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் நள்ளிரவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலையை அதிமுகவினர் நிறுவினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் போக்கு வரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், அங்கிருந்த பெரியார், அண்ணா சிலைகள் அகற்றப்பட்டன. அவ்விடத் தில் திமுக சார்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு, அதன் மேல்பகுதியில் ஆறு சிலைகளை அமைக்க பீடம் உருவாக்கப் பட்டது. இந்த பீடத்தில் பெரியார், அண்ணா சிலைகள் அமைக்கப் பட்டன. இந்த பீடத்தில், கடந்த ஆண்டு அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர். சிலை நிறுவப்பட்டது.
அனுமதி மறுப்பு
முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் மறைவை தொடர்ந்து, அந்தந்த கட்சியினர் சார்பில் இங்கு சிலை அமைக்க ஈரோடு மாநகராட்சியிலும், மாவட்ட நிர்வாகத்திடமும் அனுமதி கோரி கடிதம் அளித்தனர். திமுகவின் மனுவை மாநகராட்சி ஏற்காத நிலையில், முனிசிபல் காலனி பகுதியில் கருணாநிதி சிலை நிறுவப்பட்டது.
இந்நிலையில், பன்னீர் செல்வம் பூங்காவில் எம்ஜிஆர் சிலை அருகே ஜெயலலிதா சிலையை நிறுவுவதற்காக நேற்று முன் தினம் இரவு 11 மணிக்கு அதிமுகவினர் ஒன்று கூடினர். இதை அறிந்த திமுகவினரும் ஒன்று கூடி, பெரியார் சிலை அருகே கருணாநிதி சிலையை அமைக்க திட்டமிட்டனர்.
இரு தரப்பும் பன்னீர் செல்வம் பூங்கா பகுதியில் திரண்டதால், மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதற்கிடையே, மாநகராட்சியின் அனுமதிக் கடிதத்தோடு வந்த அதிமுகவினர், நள்ளிரவு ஒரு மணி அளவில் ஜெயலலிதாவின் சிலையை எம்.ஜிஆர். சிலை அருகே பீடத்தில் நிறுவி, துணியால் மூடிச்சென்றனர்.
ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சு.முத்துசாமி தலைமையில், கருணாநிதி சிலையுடன் ஊர்வலமாக வந்த திமுகவினர், தங்கள் தலைவரின் சிலையை நிறுவ அனுமதி கேட்டனர். அதற்கு காவல்துறை அனுமதி மறுக்கவே, போலீஸாரைக் கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.
அப்போது அங்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் , (பொறுப்பு) அர.அருளரசு, மாநகராட்சி அனுமதியுடன் வந்தால் சிலை வைக்க அனுமதிக்கப்படும் என்று கூறி திமுகவினரை திருப்பி அனுப்பினர்.
இதுகுறித்து திமுக மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி கூறும்போது, கருணாநிதி சிலையை வைக்க ஏற்கெனவே கடிதம் கொடுத்தும் எங்களுக்கு அனுமதி வழங்காமல், அதிமுகவினருக்கு மட்டும் அனுமதி வழங்கி இருப்பது கண்டிக்கத்தக்கது. நாங்களும் சிலையை வைத்துக் கொள்கிறோம். அனுமதி கிடைத்த பின்னர் திறப்பு விழா நடத்துகிறோம் என்று கூறியதை போலீஸார் ஏற்க மறுத்துவிட்டனர். இதுகுறித்து விரைவில் முடிவு எடுப்போம் என்றார்.
பலத்த போலீஸ்பாதுகாப்பு
பன்னீர்செல்வம் பூங்காவில் நிறுவப்பட்டுள்ள ஜெயலலிதா சிலையை முதல்வர் பழனிசாமி, வரும் 21-ம்தேதி திறந்து வைக்கவுள்ளார். அதுவரையில் சிலையை பத்திரமாக பாதுகாக்கும் பணியில் ஏராளமான போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கண் காணிப்புக் கேமராவும் இப்பகுதி யில் பொருத்தப்பட்டுள்ளது.